Published : 15 Jul 2021 09:44 PM
Last Updated : 15 Jul 2021 09:44 PM

மீனவர்கள் என்பதற்கான விளக்கம் வரையறுக்கப்பட வேண்டும்: கனிமொழி எம்.பி. பரிந்துரை

மீனவர்கள் என்பதற்கான விளக்கம் வரையறுக்கப்பட வேண்டும், மீனவர்களுக்கான விதிகளை வரையறுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு பரிந்துரைகளை "இந்திய மீன்வள வரைவு மசோதா, 2021" மீதான விவாதத்தின் மீது கனிமொழி எம்.பி. முன்வைத்துள்ளார்.

முன்னதாக இன்று, மத்திய அரசின் மீன்வள அமைச்சகம் "இந்திய மீன்வள வரைவு மசோதா, 2021" மீது கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோடு காணொலி வாயிலாக விவாதத்தை நடத்தியது.

இtது தொடர்பாக, தூத்துக்குடி தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு, இந்த மசோதாவை பற்றிய பின்வரும் கருத்துக்களை இமெயில் மூலம் அனுப்பியுள்ளார்.

1) “மீனவர்கள்” என்பதற்கான விளக்கம் வரையறுக்கப்பட வேண்டும்.

2) மீன் பதப்படுத்துதல் என பிரிவு 2 (c) ல் உள்ளது, மீன்களை எடுத்துச் செல்லுதல் என்பதையும் சேர்க்க வேண்டும்.

3) மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்ட மாநில அதிகாரி இந்திய மீன்வளச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு அறிவிப்பு வெளியிட வேண்டும். கடலோரப் பாதுகாப்புப் படையை சேர்ந்தவர் பிரதிநிதியாக இடம் பெறுவார் என்ற பிரிவு 2 (a) நீக்கப்பட வேண்டும்.

4) பிரிவு 4-ல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்கனவே வழங்கிய மீன்பிடிப்பதற்கான அனுமதி, பிரத்யேக பொருளாதார பகுதிகள் (EEZ) மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கும் பொருந்தும் என்று மாற்ற வேண்டும்.

5) மீன்பிடித்தலுக்கான அனுமதி வேறொருவருக்கு மாற்றம் செய்ய வழிவகை செய்யும் வகையில் பிரிவு 6ல், பத்தி 7ல் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

6) பிரிவு 22இன் கீழ், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தால் ஓராண்டு சிறை உள்ளிட்ட அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தெளிவில்லாமல் இருப்பதன் காரணமாக, அதிகாரிகளால் மீனவர்கள் தொல்லைக்கு ஆளாக நேரிடும்.

7) இச்சட்டத்தின் அட்டவணை 2ல் இந்திய மீன்பிடி கப்பல்களுக்கான அபராதம் குறித்த பிரிவு உள்ளது. மீனவர்களுக்கு மீன்பிடி தொழில் அடிப்படை ஆதாரம் என்பதால், அதிகப்படியான அபராதங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். சில நேர்வுகளில் அவர்கள் மீன்பிடித் தொழிலையே கைவிட நேரிடும். ஆகையால், இந்த அபராதத் தொகை குறைக்கப்பட வேண்டும்.

8) விதிகளை உருவாக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குத்தான் மீனவர்களின் சிக்கல்கள் குறித்த அறிவும் அனுபவமும் இருக்கும் என்பதால் இந்த அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும். இதனால் உள்ளூர் சூழலுக்கு ஏற்ப, மாநில அரசுகள் விதிகளை உருவாக்க முடியும். மத்திய அரசிடம் இவ்வதிகாரம் கொடுக்கப்பட்டால் மாநில அரசுகளால் விதிகளை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப உருவாக்கவோ மாற்றங்கள் செய்யவோ முடியாது.

மேலும், பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமைகளை பாதுகாக்கும் அதிகாரமும் மாநில அரசுகளுக்கே கொடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கனிமொழி இந்திய மீன்வள வரைவு மசோதா மீது தனது கருத்துக்களை இ-மெயில் வாயிலாக மத்திய அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x