Published : 15 Jul 2021 03:13 AM
Last Updated : 15 Jul 2021 03:13 AM

தமுமுக பெயர் பலகை விவகாரத்தில் மண்ணடியில் 2 தரப்பினர் இடையே கடும் மோதல்: 3 போலீஸார் உட்பட 9 பேர் காயம்

தமுமுக பெயர் பலகை வைக்கப்பட்ட விவகாரத்தில் இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டது குறித்து சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1995-ம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) உருவாக்கப்பட்டது. சென்னை மண்ணடி வடமரைக்காயர் தெருவில் இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் உள்ளது. தமுமுகவின் தலைவராக இருந்த ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளராக இருந்த எஸ்.ஹைதர்அலி ஆகியோர் இரு கோஷ்டிகளாக செயல்பட ஆரம்பித்தனர். 2019-ம் ஆண்டில் இருவரும் தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டினர். தமுமுகவில் இருந்து ஜவாஹிருல்லாவை நீக்குவதாக எஸ்.ஹைதர்அலியும், எஸ்.ஹைதர்அலியை நீக்குவதாக ஜவாஹிருல்லாவும் அறிவித்தனர். இந்நிலையில், ஜவாஹிருல்லா தரப்பினர் நீதிமன்றம் சென்று, தமுமுக கொடியை எஸ்.ஹைதர்அலி பயன்படுத்த தடை உத்தரவு பெற்றனர்.

இந்நிலையில் சென்னை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில், எம்.ஹைதர்அலி என்பவர் தமுமுக தலைமை அலுவலகம் என பெயர்பலகை மற்றும் கொடி வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜவாஹிருல்லா தரப்பினர், நேற்று முன்தினம் இரவில் அங்கப்ப நாயக்கன் தெருவுக்குள் கூட்டமாக சென்று அந்த பெயர் பலகையையும், கொடியையும் உடைத்து வீசினர்.

சமூக வலைதளங்களில்..

இதைத் தடுக்க முயன்ற எம்.ஹைதர்அலி ஆதரவாளர்களுக்கும், ஜவாஹிருல்லா ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 3 போலீஸார் உட்பட 9 பேர் காயம் அடைந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதுகுறித்து தமுமுகவின் பொதுச் செயலாளர் ஹாஜாகனி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமுமுகவின் தலைமையகம் அமைந்துள்ள மண்ணடி வடமரைக்காயர் தெரு அருகே அங்கப்பன் தெருவில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் தமுமுக மாநிலத் தலைமையகம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13-ம் தேதி மதியமே காவல் துறையில் தமுமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இரவு வரை போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி தொண்டர்கள் அந்த பெயர் பலகையை அகற்றியுள்ளனர். இதைத் தடுக்க எதிர்தரப்பினர் நடத்திய தாக்குதலில்தான் பலர் காயம் அடைந்துள்ளனர்” என்று கூறியிருக்கிறார்.

எம்.ஹைதர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜவாஹிருல்லா தரப்பினர் நீதிமன்றம் மூலம் தடையாணை வாங்கியிருப்பது எஸ்.ஹைதர்அலிக்கு மட்டுமே. எனக்கும் அவருக்கும் தொடர்பில்லை. தமுமுக என்ற பெயரை நான் முறைப்படி பதிவு செய்துள்ளேன். அதன் தலைவராகவும் இருக்கிறேன். ஆனால், பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா, காயிதேமில்லத் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றும் ஹாஜாகனி, தாம்பரத்தில் செருப்பு வியாபாரம் செய்யும் யாகூப் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் எனது அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவல் உதவி ஆணையாளர் கோடிலிங்கம் தலைமையில் வந்த போலீஸார் தாக்குதல் நடத்தியவர்களை தடுக்காமல், அவர்களுக்கு பாதுகாப்பாக செயல்பட்டுள்ளனர்’' என்று கூறியிருக்கிறார்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x