Last Updated : 25 Feb, 2016 08:40 AM

 

Published : 25 Feb 2016 08:40 AM
Last Updated : 25 Feb 2016 08:40 AM

அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை; தேமுதிக, பாமகவுடன் பேசி வருகிறோம்: தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டம்

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தேமுதிக, பாமகவுடன் கூட்டணி பேச்சு தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

* கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக்கூட தாண்டவில்லை. இப்போது 60 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக கூறுகிறீர்கள். இது சாத்தியம்தானா?

மிஸ்டுகால் மூலம் 60 லட்சம் உறுப் பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்தோம். 55 லட்சம் பேர் உறுப்பினராக விருப்பம் தெரிவித்தனர். வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து 40 லட்சம் பேரின் பெயர், முகவரி விவரங்களை சேகரித்துள்ளோம். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 100 உறுப்பினர்களை சேர்ப்பது என திட்டமிட்டு செயல்பட்டதால் இது சாத்தியமானது.

* ஸ்ரீரங்கத்தில் ஒரே நாளில் 15 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ந்ததாக அறிவித்தீர்கள். ஆனால், அங்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெறும் 5 ஆயிரம் வாக்குகளைத்தானே பெற்றது?

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பண பலமும், அதிகார பலமும் ருத்ர தாண்டவமாடி யது. எதற்கும் விலை போகாமல் 5 ஆயிரம் பேர் பாஜகவுக்கு வாக்களித்ததே சாதனைதான். இடைத்தேர்தல் முடிவுகளை வைத்து ஒரு கட்சியின் செல்வாக்கை எடை போட முடியாது.

* அதிமுக - பாஜக கூட்டணி ஏற்படும் என செய்திகள் வருகின்றதே, அப்படி ஏற்படுமா?

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தமிழகத் தில் ஒரு ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். எனவே, அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் மக்கள் நலனுக் காக அதிமுக அரசுடன் மத்திய அரசு இணக்கமாக உள்ளது. அதிமுகவுடன் ஆட்சியில் கூட்டணி வைத்துள்ளோமே தவிர, அரசியல் கூட்டணி வைக்கவில்லை.

* முதல்வர் ஜெயலலிதாவை நீங்கள் சந்தித்ததில் அரசியலும் இருப்பதாக கூறப்படுகிறதே?

இரு கட்சித் தலைவர்கள் சந்தித்துக் கொண்டாலே அதற்கு உள்நோக்கம் கற்பிக் கும் அரசியல் கலாச்சாரம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது. இது மாற வேண்டும். எனது மகன் - மருமகள் கூட்டணிக்கு அழைப் பதற்காகவே முதல்வரை சந்தித்தேன்.

* திமுக - காங்கிரஸ் கூட்டணி அறிவிக் கப்பட்ட நிலையில் பாஜக கூட்டணியில் எந்த முன்னேற்றமும் இல்லையே?

தேசிய அளவில் ஊழலைத் தொடங்கி வைத்த காங்கிரஸும், தமிழகத்தில் ஊழ லுக்கு வித்திட்ட திமுகவும் கூட்டணி சேர்ந் ததில் வியப்பில்லை. இந்த கூட்டணியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். கடந்த மக்களவைத் தேர்தலைப்போல வலுவான 3-வது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

* ஆனால், அதற்கான அறிகுறிகள் தென்படவில்லையே?

எங்களது தேர்தல் வியூகங்களை ஊட கங்களிடம் வெளிப்படையாக சொல்ல முடியாது. தேமுதிக, பாமகவுடன் பேசி வருகிறோம். தமிழக தேர்தல் பொறுப் பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல் ஆகியோர் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக, பாமக மட்டுமல்ல; தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பாஜக கூட்டணி வரவேண்டும் என விரும்புகிறோம்.

* திருமாவளவன் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் எப்படி பாஜக கூட்டணிக்கு வருவார்?

அரசியலில் சாத்தியப்படாதது என்று எதுவும் இல்லை. திருமாவளவன், வாசனு டன் நேரடியாக நாங்கள் பேசவில்லை. ஆனால், அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள் ளோம். திருமாவளவன் ஏற்கெனவே பாஜக கூட்டணியில் இருந்தவர்தான்.

* ஒவ்வொரு தேர்தலிலும் நடிகர் ரஜினிகாந்துக்கு பாஜக தலைவர்கள் அழைப்பு விடுப்பது வழக்கமாக உள்ளது. இந்தத் தேர்தலிலும் அவருக்கு அழைப்பு விடுப்பீர்களா?

ரஜினிகாந்த் மட்டுமல்ல, அவரைப் போன்ற தேசிய சிந்தனை கொண்டவர்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தமிழகத்தில் தேசியம் தழைக்க பாஜகவை ரஜினி ஆதரிக்க வேண்டும். அதேநேரத்தில் ரஜினி உட்பட யாரை நம்பியும் பாஜக இல்லை.

* இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செய லாளர் டி.ராஜாவின் மகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசியிருப்பது பற்றி?

என்னைப் பொறுத்தவரை ஒருவருடைய கருத்து வலிமையானதாக இருக்க வேண் டுமே தவிர, மற்றவர்களுக்கு வலியைத் தருவதாக இருக்கக் கூடாது. பாஜக ஆட்சிக்கு வந்தால் மதக் கலவரம் நடக்கும், சிறுபான்மையினரே இருக்க முடியாது என்றெல்லாம் காங்கிரஸ் - இடதுசாரிகள் பிரச்சாரம் செய்தனர். ஆனால், அவர்கள் அச்சுறுத்தியதுபோல எதுவும் நடக்கவிலை என்பதால் மாணவர்களை தூண்டுவிட்டு அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கின்றனர்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x