Published : 14 Jul 2021 03:15 AM
Last Updated : 14 Jul 2021 03:15 AM

வந்தவாசியில் பெற்றோரை இழந்து பரிதவிக்கும் 3 பிள்ளைகளின் கல்வி கனவு கானல் நீரானது: வறுமையால் வேலைக்கு செல்லும் பரிதாபம்

வந்தவாசியில் பெற்றோரை இழந்து கல்வி கற்க முடியாமல் தவிக்கும் லம்மியா, ஜீவானந்தம், இளவரசி.

திருவண்ணாமலை

வந்தவாசியில் பெற்றோரை இழந்து பரிதவிக்கும் 3 பிள்ளைகளின் கல்வி கனவு கானல் நீராகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, வெண்குன்றம் சாலை கம்மாளத் தெருவில் வசித்தவர் கோவிந்தசாமி. நகை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி மோகனா. இவர்களுக்கு மகள் இளவரசி(18), மகன் ஜீவானந்தம்(16), மகள் லம்மியா(15) ஆகியோர் உள்ளனர். பிளஸ் 2 வகுப்பை இளவரசியும், பத்தாம் வகுப்பை மற்ற இருவரும் முடித்துள்ளனர்.

இந்நிலையில், கோவிந்தசாமி கடந்த 2017-ம் ஆண்டும், மோகனா கடந்த ஜனவரி மாதமும் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டனர். தாய், தந்தையை அடுத்தடுத்து இழந்த பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியானது. உணவுக்கு கூட அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த வந்தவாசி கற்க கசடற கல்விக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து 3 பேரையும் தங்க வைத்துள்ளனர். மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் லம்மியா மட்டும் வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ளார். மற்ற இரண்டு பேருக்கும் படிக்க ஆசை இருந்தாலும், அன்றாட வாழ்க்கையை கடந்து செல்வதற்காக டைல்ஸ் கடை மற்றும் செல்போன் கடையில் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, “நன்றாக படித்து உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என பெற்றோர் விரும்பினர். அவர்களது விருப்பப்படி, படித்து வந்தோம். இந் நிலையில் தந்தை, தாயை அடுத்தடுத்து இழந்து விட்டோம். இதனால் அன்றாட வாழ்க்கையை நகர்த்த முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் எப்படி படிக்க முடியும். எங்களுக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. எத்தனை நாட்களுக்குதான் நல்ல உள்ளங்கள் எங்களுக்கு உதவிட முடியும். அதனால், எங்களது சகோதரியை மட்டும் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துவிட்டு, நாங்கள் இருவரும் வேலைக்கு செல்கிறோம்” என்றனர்.

இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறும்போது, “பெற்றோரை இழந்து தவிக்கும் 3 பிள்ளைகளின் கல்விக்கும், அன்றாட வாழ்க்கைக்கும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் உதவிட முன் வர வேண்டும். மேலும், 3 பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தேவையான கல்வி மற்றும் உதவிகளை தமிழக அரசும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் செய்து கொடுத்தால், அவர்களது வாழ்வில் வசந்தம் வீசும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x