Published : 13 Jul 2021 10:22 PM
Last Updated : 13 Jul 2021 10:22 PM

'நீட் தேர்வு தீர்ப்பு இரட்டைவேட பாஜகவுக்கும்; அதற்கு சேவகம் செய்யும் அதிமுகவுக்கும் நெத்தியடி': முதல்வர் ஸ்டாலின்

நீட் தேர்வு குறித்த ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இரட்டை வேட பாஜக.வுக்கும், அதற்கு சேவகம் செய்யும் அதிமுக.,வுக்கும் நெத்தியடி தீர்ப்பு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கை வருமாறு:

மருத்துவக் கல்வி பயில நினைக்கும் தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வினை, அது முன்மொழியப்பட்ட காலம் முதலே அரசியல் ரீதியாக அதனை எதிர்த்து வருகிறோம். திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு தொடர்பான பாதிப்புகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

நீட் தேர்வானது தமிழ்நாட்டு மாணவ, மாணவியரிடையே கல்வி, சமூக, பொருளாதார ரீதியாக எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆராய்வதற்காக இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினரிடம் இதுவரை 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து கருத்துகள் குவிந்துள்ளன. இவற்றை ஆராய்ந்து அதன் மூலமாக தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.

அந்த அறிக்கை கிடைத்ததும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து மேற்கொள்ளவிருக்கிறது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிலையில் பாஜக பொறுப்பாளர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் இக்குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். 'நீட் தேர்வை விலக்குவது சட்டரீதியாக இருக்குமானால் அதனை பாஜக ஏற்கும்' என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் சொல்லிய நிலையில், அப்பட்டமான இரட்டை வேடமாக அதே பாஜக.,வின் பொறுப்பாளரால் இத்தகைய மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தங்களின் அரசியல் லாபங்களுக்காக, யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் நலனுக்கு எதிராக இத்தகைய மனுவை அந்தப் பொறுப்பாளர் தாக்கல் செய்திருந்தார்.

ஆட்சியை இழந்த பிறகும் பாஜக.,வின் பாதம் தாங்கி அடிமை சேவகம் செய்யும் அதிமுக.,வின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, இந்தக் குழுவையே நாடகம் என்று சொன்னார். 'நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் போடுவதுபோல நாங்கள் போடுகிறோம்; நீங்கள் அதைக் குப்பையில் போடுங்கள்' என்று பாஜகவுடன் திரைமறைவு ஒப்பந்த நாடகம் நடத்தி ஒரு முறையல்ல; இரண்டு முறை, தமிழ்நாடு சட்டமன்றத்தையே ஏமாற்றிய பழனிசாமிதான், திமுக அரசால் அமைக்கப்பட்ட குழுவை நாடகம் என்று கூறினார்.

நீட் தேர்வுக்கு எதிராக பாஜக மனு தாக்கல் செய்ததை ஒரு வரி கூட கண்டிக்க தைரியம் இல்லாத பழனிசாமி, மாணவர் நலன் கருதி திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை குறை கூறினார். நீட் தேர்வுக்கு எதிரானவன்தான் நான் என்று பழனிசாமி சொல்லிக் கொள்வதைப் போல கபடநாடகம் வேறு இருக்க முடியுமா? அப்படி எதிரானவராக இருந்திருந்தால், அனைத்துக் கட்சியினரும் தமிழ்நாடு அரசோடு கைகோத்து, பாஜக.,வின் முயற்சியை முறியடிக்க உயர் நீதிமன்றத்தில் களமிறங்கியபோது, தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது ஏன் என்று விளக்க முடியுமா?

பாஜக.,வின் இரட்டை வேடம், அதிமுக.,வின் அடிமைச் சேவகம் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து, தனது தீர்ப்பின்மூலம் நெத்தியடி கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழ்நாட்டு மாணவக் கண்மணிகளின் கண்களைக் குத்தும் பாஜக.வின் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. 'நீட் தேர்வு மூலமாக ஏற்படும் பாதிப்புகளை ஆராய தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பாணை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல. பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே தமிழ்நாடு அரசு இந்தக் குழுவை அமைத்துள்ளது. பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிக்க முடியும்' என்று தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பாணைக்கும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை எனக் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, “நீட் பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு மக்கள் கருத்தைக் கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்?” என மனுதாரருக்குக் கேள்வி எழுப்பியதோடு; விளம்பரத்திற்காக இதுபோன்ற வழக்குகள் தொடரப்படுவதாக கருத்து தெரிவித்தார்கள். ஆய்வுக் குழுவின் அறிக்கை மூலமாக மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களின் நிலைமை தெரிய வரும் என்றும், ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை மூலமாக நீட் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவர முடியும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அரசுப் பள்ளி மாணவர்கள், பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு காரணமாக ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வுசெய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர, வேறு ஏதும் கூறப்படவில்லை எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, ஒன்றிய அரசின் சட்டங்களுக்கு எதிராகவோ இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

குழு நியமனம் என்பது வீண் செலவு எனக் கூறமுடியாது என தெரிவித்த நீதிபதி, மக்கள் கருத்து கேட்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்து, மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையைத் தடுக்கும் வகையில், மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிரான நமது போராட்டத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும். மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் இது தொடக்கப் புள்ளியாகும்.

மாணவர்களின் உரிமை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமையும் இந்தத் தீர்ப்பின் மூலமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. முதல் வெற்றியே, முழு வெற்றியாக மாறும் என்ற நம்பிக்கையை தமிழ்நாடு அரசுக்கு இந்தத் தீர்ப்பு அளித்துள்ளது.

நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை, அதன் மூலமாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஆகியவை அடுத்தடுத்த காலங்களில் வரிசையாக நடக்க இருக்கின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வுத் தேதி அதற்குள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் இந்த நடவடிக்கைகள் அதற்குள் முடிவடைய இயலாத சூழல் உள்ளது.

தமிழ்நாடு அரசு, சட்டபூர்வ நடவடிக்கையில் இருக்கும் இந்த நேரத்தில் நடக்கும் இந்த ஆண்டுக்கான தேர்வை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையில் வருந்தத்தக்கதே.

ஆனாலும் இறுதியில், நீட் தேர்வினால் நமது மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம் என்ற நிலையை நிச்சயம் உருவாக்குவோம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x