Published : 12 Jul 2021 03:14 AM
Last Updated : 12 Jul 2021 03:14 AM

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மக்களிடம் பனை ஓலைப்பெட்டிகள் பயன்பாட்டை அரசு ஊக்குவிக்குமா? - நாகலாபுரம் பகுதி தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

நாகலாபுரத்தில் பனை ஓலை பெட்டிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள்.

கோவில்பட்டி

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை ஓலைப்பொருட்கள் பயன் பாட்டை மக்களிடம் ஊக்கப்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுர த்தில் பனை ஓலைப்பெட்டிகள் தயாரிப்பு முக்கிய தொழிலாக நடந்து வருகிறது. சுமார், 100 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நாகலாபுரம் வந்து, பனை ஓலைப்பெட்டிகளை வாங்கிச் செல்கின்றனர்.

அதேபோல், ஓலையில் தயாரிக்கப்படும் கை விசிறிகளும் இங்கு அதிகம் உற்பத்தியாகின்றன. இவை, இன்னும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோருக்கு வழங்கப் பட்டு வருகின்றன. ஆனால், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான மோகம் காரணமாக பனை ஓலைப் பொருட்களின் பயன்பாடு குறைந்துவிட்டது. அத்துடன், கரோனா பேரிடரும் பனை ஓலைப் பெட்டிகள் தயாரிக்கும் தொழிலாளர்களை விட்டுவைக்கவில்லை. வேறு தொழில் தெரியாத நிலையில், நலவாரியம் போன்ற எதுவும் இல்லாததால், பனை ஓலைப்பெட்டி தயாரிப்பவர்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை.

பனை ஓலைப்பெட்டி தயாரிப்பில் ஈடுபடும் க.ஜீவா, க.மணிகண்டன் ஆகியோர் கூறியதாவது:

பனை ஓலையில் கால், அரை, ஒரு கிலோ என 3 ரகங்களில் பெட்டிகள் தயாரிக்கிறோம். மேலும், பரிசுப் பெட்டிகள் 7 வகையாக பின்னப்படுகின்றன. 3 தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் இங்கிருந்து பெட்டிகளை அனுப்புகிறோம். பனை மரத்தின் அருமை தெரியாமல், அவை வேரோடு சாய்க்கப்படுகின்றன. இதனால், பனை ஓலைகளை அண்டை மாவட்டமான ராமநாதபுரத்தில் இருந்து வாங்கி வருகிறோம்.

விற்பனைக்கு அனுப்புவதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பனை ஓலை பெட்டிகள்.

பனை ஓலை வெட்டுவது, செதுக்குவது, மினி லாரியில் ஏற்றுவது, வாடகை என ரூ.15,000 ஆகிவிடுகிறது. வேலையாட்களுக்கு ரூ.350 வரை தினக்கூலி கொடுக்க வேண்டும். கரோனா காலத்துக்கு முன்பு வரை ஓரளவு வியாபாரம் இருந்தது. அதன் பின்னர் கோயில் விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் இல்லை. போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் ஏதாவது ஆர்டர் கிடைத்தால், இ-பாஸ் எடுத்து, மினி லாரியில் சென்று பனை ஓலைகள் வெட்டி எடுத்து வந்து, ஆர்டருக்கு தகுந்தவாறு தொழிலா ளர்களைக் கொண்டு பெட்டிகளை தயாரித்து வழங்கினோம்.

எப்போதுமே, சித்திரை, வைகாசி, ஆடி போன்ற மாதங்களில் கோயில் திருவிழாக்கள் அதிகமாக நடைபெறும். அப்போது பனை ஓலைப் பெட்டிகளுக்கான ஆர்டர்களும் அதிகரிக்கும். இந்தாண்டும் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், எந்தவித ஆர்டர் களும் இல்லாமல் வேலையிழந்துள்ளோம். எங்களுக்கென்று தனி வாரியம் இல்லாததால் நிவாரணத் தொகை எதுவும் கிடைக்கவில்லை. முற்றிலும் வருமானம் நின்று போனதால் ஏராளமானோர் வேறு தொழில் தேடிச்சென்று விட்டனர்.

பனை ஓலையைப் பொறுத்தவரை, இதில் ஒரு பொருளை வைத்திருந்தால், அதன் குணம் மாறாது. ஆனால், பிளாஸ்டிக்கில் வைக்கப்படும் உணவுப் பொருட்களின் தன்மை மாறிவிடும். இதற்கு சரியான உதாரணம் கருப்பட்டி மிட்டாய். இதனை இப்போதும் மிட்டாய்க் கடைகளில் ஓலைப்பெட்டியில் வைத்துதான் கொடுக்கின்றனர். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கைக்கும், உடலுக்கும் தீங்கு ஏற்படுத்தாத பனை ஓலைக்கு மாற வேண்டும்.

பனை ஓலைப்பெட்டி தொழிலாளர்களுக்கென தனியாக வாரியத்தை அரசு அமைக்க வேண்டும். இதன் மூலம் எங்களது குழந்தைகளுக்கு கல்வி, திருமணம் போன்றவற்றுக்கு நிதி உதவி கிடைக்கும். அதேபோல், பனை ஓலையில் தயாரிக்கப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, அரசு விழாக்களில் பனை ஓலைப் பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும். எங்களுக்கு வங்கிகளில் இருந்து வட்டியில்லாத அல்லது மானியத்துடன் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பனை ஓலைத் தொழில் முன்னேற்றமடையும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x