Last Updated : 11 Jul, 2021 07:21 PM

 

Published : 11 Jul 2021 07:21 PM
Last Updated : 11 Jul 2021 07:21 PM

புதுச்சேரியில் உள்துறை பாஜகவுக்கு ஒதுக்கீடு: முக்கியத்துறைகளை வசப்படுத்திய என்.ஆர்.காங்கிரஸ்

ரங்கசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் முதல்வர், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமிக்கு வருவாய், கலால், சுகாதாரத்துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நமச்சிவாயத்துக்கு உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்துறையை பாஜகவுக்கு அளித்து முக்கியத்துறைகளை முதல்வர் ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸுக்கு வசப்படுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வென்று கடந்த மே 7-ம் தேதி ஆட்சியமைத்தது. அதையடுத்து, அமைச்சர்கள் பதவியேற்பதற்கு ஐம்பது நாட்களானது. அமைச்சர்கள் பதவியேற்றும் பொறுப்புகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்நிலையில், இன்று (ஜூலை 11) காலை அமைச்சர்கள் பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்வர் ரங்கசாமி தந்தார். அதையடுத்து, ஆளுநர் ஒப்புதல் தந்து தலைமைச் செயலாளருக்கு அனுப்பினார். அதையடுத்து, மாலையில் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.

துறைகள் விவரம்:
முதல்வர் ரங்கசாமி: கூட்டுறவு, வருவாய், கலால், பொது நிர்வாகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், இந்து சமய நிறுவனங்கள், வக்ஃப் வாரியம், உள்ளாட்சித்துறை, நகர மற்றும் கிராம ஒருங்கமைப்பு, துறைமுகங்கள், அறிவியல் தொழில்நுட்பம்மற்றும் சுற்றுச்சூழல்

அமைச்சர் நமச்சிவாயம்: உள்துறை, மின்துறை, தொழில்கள் மற்றும் வணிகம், கல்வி (பள்ளிக்கல்வி, உயர்கல்வி), விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், முன்னாள் படைவீரர் நலன்

அமைச்சர் லட்சுமி நாராயணன்: பொதுப்பணித்துறை, சுற்றுலா மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து, மீன்வளம், சட்டம், தகவல் தொழில்நுட்பம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை.

தேனி ஜெயக்குமார்: வேளாண்துறை, கால்நடை, வனத்துறை, சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலன், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன்

சந்திர பிரியங்கா: ஆதிதிராவிடர் நலன், போக்குவரத்து, வீட்டுவசதி, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு, கலை மற்றும் பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்

சாய் சரவணக்குமார்: குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சிறுபான்மை விவகாரங்கள், தீயணைப்பு

முக்கியத்துறைகளை கைவசப்படுத்திய என்.ஆர்.காங்கிரஸ்

கூட்டணிக்கட்சியான பாஜக முதலில் துணை முதல்வர் பதவி கோரியது. ஆனால், முதல்வர் அதற்கு ஒப்புதல் தரவில்லை. பின்னர், முக்கிய துறைகளை கோரியது. எனினும், வழக்கமாக முதல்வர் வசம் இருக்கும் உள்துறையை பாஜக கோரியது. அதை இம்முறை பாஜகவுக்கு முதல்வர் தந்துள்ளார். தற்போது பாஜகவைச்சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்துக்கு உள்துறை தரப்பட்டது.

ஆனால், முக்கியத்துறைகள் முதல்வர் ரங்கசாமியிடமும், அவரது கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்களிடம் இருக்கிறது. குறிப்பாக, கடந்த முறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் இருந்த முக்கியத்துறைகளில் பெரும்பாலானவை, தற்போது அவருக்கு ஒதுக்கப்படவில்லை. கடந்த முறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் இருந்த பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, கலால், நகர மற்றும் கிராம ஒருங்கமைப்பு ஆகிய அனைத்துத்துறைகளும் தற்போது முதல்வர் தொடங்கி, என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்களிடம் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x