Published : 10 Jul 2021 03:14 AM
Last Updated : 10 Jul 2021 03:14 AM

சென்னை, புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை: அதிகபட்சமாக அம்பத்தூரில் 9 செ.மீ. பதிவு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தேங்கிய தண்ணீரில் செல்லும் வாகனங்கள். படம்: ம.பிரபு

சென்னை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை நேற்று காலை வரை நீடித்தது. அம்பத்தூரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பெய்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 8-ம் தேதி காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்தது. மாலை நேரத்தில் புழுக்கமான சூழலும் நிலவியது. இந்நிலையில், வெப்பச் சலனம் மற்றும் வட தமிழக பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இரவு சுமார் 8.30 மணி அளவில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.

சென்னை மாநகரப் பகுதிகளான சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கோயம்பேடு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், பெரம்பூர், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

புறநகர் பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இடி, மின்னல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது.

அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஐஸ் அவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை 9 மணி வரை சாரல் மழை நீடித்தது. அதிகாலையில் மழை குறைந்துவிட்ட நிலையில், நீர் தேங்கிய பகுதிகளில் மழைநீர் தானாக வற்றியதால், நேற்று காலையில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. கோயம்பேடு சந்தை வளாகத்தில் மழைநீர் வடியாததால், காய்கறி இறக்கி, ஏற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 9 செ.மீ., பூந்தமல்லியில் 8 செ.மீ., கொரட்டூரில் 7 செ.மீ., திருவாலங்காட்டில் 6 செ.மீ., புழல், தண்டையார்பேட்டை, பெரம்பூரில் 5 செ.மீ., கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், நுங்கம்பாக்கம், சென்னை விமான நிலையம், ஆட்சியர் அலுவலகம், ஆலந்தூரில் 4 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x