தொலைதூரக் கல்வியில் சட்டப்படிப்பு; அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அனுமதி அளிக்கவில்லை: பல்கலைக்கழக மானியக் குழு தகவல்

தொலைதூரக் கல்வியில் சட்டப்படிப்பு; அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அனுமதி அளிக்கவில்லை: பல்கலைக்கழக மானியக் குழு தகவல்
Updated on
1 min read

தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்பைப் பயிற்றுவிக்க அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகம், தொலைதூரக் கல்வி மூலம், மூன்று ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு சட்டப்படிப்புகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் இல்லாமல் தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்பு நடத்தப்படுவதாக மனுவில் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்கத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்திய பார் கவுன்சில் தரப்பில், தொலைதூரக் கல்வியில் சட்டப்படிப்புக்கான வகுப்புகளை நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

தொலைதூரக் கல்வி மூலம் சட்டப் படிப்பை வழங்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை எனப் பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது சம்பந்தமாக பதில் மனுவைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in