Published : 09 Jul 2021 03:16 AM
Last Updated : 09 Jul 2021 03:16 AM

ஒரு வாரத்தை தாண்டியும் தட்டுப்பாடு நீடிப்பு; நெல்லையில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்த திரண்ட மக்கள்: 11 மணிக்குள் தீர்ந்ததால் காத்திருந்தவர்கள் ஏமாற்றம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 8 நாட்களுக்குப்பின் கோவாக்சின் தடுப்பூசி குறைந்த அளவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. 2-வது தவணை செலுத்திக்கொள்ள ஏராளமானோர் திரண்ட நிலையில் தடுப்பூசி காலியானதால் வயது முதிர்ந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேரிட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 2,92,481 பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 2,50,246 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. திருநெல்வேலி மாவட்டத்துக்கு போதிய அளவுக்கு தடுப்பூசிகள் வரத்து இல்லாததால் தடுப்பூசி மையங்களுக்கு வரு வோர் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டுள்ளது.

கடந்த 8 நாட்களாகவே மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியது. மாவட்டத்திலுள்ள 51 மையங்களிலும் கோவாக்சின் தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் 2-வது தவணையாக இத்தடுப்பூசியை செலுத்த வேண்டியவர்கள் தவித்தனர்.

இந்நிலையில் மாவட்டத்துக்கு 1,500 கோவாக்சின் தடுப்பூசி நேற்று கொண்டுவரப்பட்டது. அதில் 300 டோஸ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மையத்துக்கும், மாநகரிலுள்ள மற்ற 9 மையங்களுக்கு தலா 100 டோஸ் மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. 2-வது தவணை செலுத்த வேண்டியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கோவாக்சின் செலுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனால் கோவாக்சின் 2-வது தவணை செலுத்த வேண்டிய ஏராளமானோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட தடுப்பூசி மையங்களுக்கு திரண்டனர். பல மையங்களில் கூட்டம் காணப்பட்டது. காலை 9-30 மணிக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பல மையங்களில் 11 மணிக்குள் கோவாக்சின் தடுப்பூசி காலியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டதால் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டது.

மாவட்டத்தில் ஒருசில மையங் களில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று போடப்பட்டன.

மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

மாவட்டத்தில் தடுப்பூசி போடப்படும் மையங்களில் தடுப்பூசி போடும் விவரங்கள், எத்தனை டோஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, எந்த தடுப்பூசி இருப்பில் உள்ளது போன்ற விவரங்களை தினந் தோறும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையினரும் ஏற்பாடு களை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சிரமங்கள் தவிர்க்கப் படுவதுடன் தேவையான மையங் களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.

பல்வேறு மாவட்டங்களிலும் தடுப்பூசிகள் போடப்படும் விவரங்களை மக்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் தெரியப் படுத்தும் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெடுத்துள்ளன. அதுபோல் திருநெல்வேலி மாவட்டத்திலும் தினமும் தடுப்பூசி தொடர்பான விவரங்கள் மக்களை சென்றடைய செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முதியவர்கள் பரிதவிப்பு

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மையத்துக்கு நேற்று கோவாக்சின் 2-வது தவணை தடுப்பூசி போட வந்த வயது முதிர்ந்த பலர் ஏற்கெனவே 2 முறை தடுப்பூசி இல்லாமல் திரும்பிச் சென்றதாகவும், தற்போது 3-வது முறையாக அலைக்கழிய நேரிட்டதாகவும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர் கலைக்குமார் தனது செல்போன் எண்ணை அவர்களிடம் கொடுத்து தடுப்பூசி இருப்பில் உள்ளதா என்ற விவரத்தை தன்னிடம் தொடர்பு கொண்டு கேட்டு விட்டு வருமாறு கூறினார். மேலும், அருகாமையில் உள்ள எந்தெந்த மையங்களில் கோவாக்சின் தடுப்பூசி இருப்பில் உள்ளது என்ற விவரத்தை தெரிவித்து, வாய்ப்புள்ளவர்கள் அங்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x