Published : 08 Jul 2021 14:42 pm

Updated : 08 Jul 2021 14:42 pm

 

Published : 08 Jul 2021 02:42 PM
Last Updated : 08 Jul 2021 02:42 PM

கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை வஞ்சித்து துன்புறுத்தியது அதிமுக ஆட்சி: ஓபிஎஸ்ஸுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலடி

minister-raja-kannappan-slams-o-panneerselvam
அமைச்சர் ராஜகண்ணப்பன்: கோப்புப்படம்

சென்னை

கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை வஞ்சித்து, துன்புறுத்தியது அதிமுக ஆட்சி என, போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று (ஜூலை 08) வெளியிட்ட அறிக்கை:


"முன்னாள் முதல்வர் கருணாநிதியால், அனைத்து போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் மீது என்றும் அக்கறை கொண்ட திமுக அரசால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சிக்கு வந்த இரு மாதங்களில், கரோனா நோய் தொற்று ஊரடங்கு காரணமாக, போக்குவரத்து நடைபெறாமல் பணியின்றி, நிர்வாகத்திற்கு வருமானமற்ற நிலையிலும், ஒட்டுமொத்த தொழிலாளர்களின் நலன்கள் மீது அக்கறை கொண்டது தமிழக அரசு.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கடும் நிதி நெருக்கடியிலும் மாத ஊதியத்தை எவ்வித பிரச்சினையுமின்றி வழங்கியதை தொழிலாளர் சமுதாயம் நன்றியுடன் பாராட்டுகிறது.

திமுக ஆட்சி அமைந்த 20 நாட்களில், கரோனா தொற்று உச்சக்கட்டத்தில் இருந்த இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், 01.01.2020 முதல் 30.04.2020 வரை ஓய்வு பெற்ற அனைத்துப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் நலன் கருதி, பல்வேறு பணப் பலன்களாக ரூ.497.32 கோடியினை கருணை உள்ளத்தோடு வழங்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தற்போது திமுக ஆட்சியில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் எந்த தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களும் எவ்வித பாதிப்பும் இல்லாமல், அவரவர் வழித்தடத்தில் அமைதியாகப் பணியாற்றி வருகின்றனர். உடல் நலம் குன்றியவர்கள் முறையான மருத்துவச் சான்றுகளின் பேரில் இலகுப் பணிகளில் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனர். உடல் நலம் குன்றியோரையும் பணி மாறுதல் செய்து துன்புறுத்தவில்லை.

தொழிலாளர்களை, தொழிலாளர்களாகப் பாவிக்காத அரசு அதிமுக அரசு என்பதற்கு கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் தொழிலாளர்கள் பட்ட வேதனைகளே சாட்சி.

* 20% தீபாவளி போனஸ் கடந்த 1996-2001 கருணாநிதி ஆட்சிக் காலத்தில் வழங்கியதை மறுத்து, வெறும் 10% மட்டுமே வழங்கி துன்புறுத்தியது.

* மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, முறையாக நடத்தப்பட வேண்டிய போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையைத் தொடராமல், ஒரு ஒழுங்கற்றப் போக்கை அதிமுக அரசுக் கடைப்பிடித்து, அதை காலங்கடத்தி, அதனால் தொழிலாளர்களின் உரிமையில் மண் அள்ளிப் போட்டது அதிமுக ஆட்சி.

* பணி ஓய்வுப் பெற்று பல்லாண்டுகளாகியும், அவர்களுக்குச் சேர வேண்டிய அனைத்துப் பணப் பலன்களும் உடனடியாக வழங்கப்படாமல், அவர்களுக்குச் சொந்தமான பணத்தைப் பல்வேறு வகைகளில் சூறையாடியது அதிமுக ஆட்சி.

ஓ.பன்னீர்செல்வம்: கோப்புப்படம்

* இறந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்குச் சேர வேண்டிய பணப் பலன்கள் உடனடியாக வழங்காமல் இழுத்தடித்தது, வாரிசுகளுக்கு வேலை வழங்காதது அதிமுக ஆட்சியில் தான்.

* ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல், அதைத் தவிர்ப்பதற்காக உதிரிச் சங்கங்களை எல்லாம் ஊக்கப்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் கடந்த 10 ஆண்டுகளாக நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நசுக்கி, பணி மாற்றம் செய்து அலையவிட்டது மற்றும் கைது நடவடிக்கை மேற்கொண்டது அதிமுக ஆட்சி.

* கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில், திமுக தொழிற்சங்க உறுப்பினர்களையே அவர்கள் அனுமதியின்றி அதிமுக தொழிற்சங்க உறுப்பினர்களாக்கி, மாதச் சந்தா மற்றும் நன்கொடைகளைக் கட்டாய அடிப்படையில் பிடித்தம் செய்தது. திமுக தொழிற்சங்க உறுப்பினர்கள் தாமாக முன்வந்து, விருப்பமில்லாத அதிமுக சந்தாவை ரத்துச் செய்யக் கோரி மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல், அவர்களின் பொருளாதாரத்தை அத்துமீறிச் சுரண்டியது அதிமுக ஆட்சி.

* அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில், மாவட்டங்களுக்கு இடையேயான இடமாறுதலுக்கு ஒரு தொகை, பணிப் பதவி உயர்வுகளுக்கு ஒரு தொகை, அனைத்துப் பணிமனைகளிலும் ரூட் போஸ்டிங்குக்கு ஒரு தொகை, ஓ.டி.யில் (OD) உலா வர ஒரு தொகை, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் இருந்து அவர்களுடையப் பணத்தை, திருமணம், வீடு கட்ட என்ற கோரிக்கைகளுக்குக் கடன் தொகை பெற ஒரு தொகை, என எல்லாவற்றுக்கும் கல்லா கட்டிய ஆட்சி அதிமுக ஆட்சி.

* தரமில்லாத உதிரி பாகங்கள் கொள்முதல், தரமில்லாத கேண்டீன் உணவு வழங்கியது, விளம்பரங்கள் மூலம் தவறான முறையில் கொள்ளை அடித்தது அதிமுக ஆட்சி.

* போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் பொற்காலமாக அமைய உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் இரண்டு மாதமே ஆன நல்லாட்சியில் குறைகள் கூற எவ்வித அருகதையும், தகுதியும், ஒபிஎஸ்ஸுக்கு இல்லை.

தொழிலாளர்களை அரசியில் ரீதியாக பழிவாங்கியது அதிமுக ஆட்சியே. அதற்கான சாட்சி மேற்கண்ட ஆதாரங்களே. மாறாக, என்றென்றும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி. ஆகவே, ஓபிஎஸ் கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

தமிழக முதல்வராகவும், துணை முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த ஓபிஎஸ், கடந்த 10 ஆண்டுகள் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் தொமுச உறுப்பினர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு, இன்று யாரோ எழுதி கொடுத்ததை கொடுத்து நீலி கண்ணீர் வடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!

ராஜகண்ணப்பன்ஓ.பன்னீர்செல்வம்போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள்திமுகஅதிமுகRajakannappanO panneerselvamTransport workersDMKAIADMK

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x