Published : 08 Jul 2021 03:13 AM
Last Updated : 08 Jul 2021 03:13 AM

கழிவுப்பொருட்களை மக்கவைத்து மண்ணுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் நுண்ணுயிரியை கண்டுபிடித்து அரசுக் கல்லூரி மாணவி சாதனை - ‘பயோனிச்சியூரஸ் தமிழியன்ஸிஸ்’ என பெயர் சூட்டல்

உதகை அரசு கலைக் கல்லூரியில் சேகரிக்கப்பட்ட மண்ணில் இருந்து புதிய வகை நுண்ணுயிரியை அக்கல்லூரி மாணவி கண்டறிந்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில் மூலக்கூறு பல்லுயிர் ஆய்வகம் உள்ளது. இங்கு, நுண்ணுயிரிகள் முதல் வனவிலங்குகள் வரை அதன் உடற்கூறுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மண்ணில் இருந்து புதிய நுண்ணுயிரியை, உதகை அரசுக் கல்லூரியின் வன விலங்கு உயிரியல் துறை மாணவி முஹ்சினா துன்னிசா கண்டுபிடித்துள்ளார்.

கல்லூரி வளாகத்தில் கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்த மாணவி முஹ்சினா துன்னிசா, தனது பேராசிரியரின் வழிகாட்டுதலுடன் அதை ஆய்வு செய்து வந்தார். ஆய்வில், ‘பயோனிச்சியூரஸ்’ என்ற குடும்பத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியை அவர் கண்டறிந்தார். இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இதற்கு ‘பயோனிச்சியூரஸ் தமிழியன்ஸிஸ்’ எனவும் மாணவி பெயரிட்டுள்ளார்.

இதுகுறித்து மாணவி முஹ்சினா துன்னிசா கூறியதாவது: கூடலூர் பாடவயல் பகுதியைச் சேர்ந்த நான், எனது இளங்கலை படிப்பில் இருந்து தற்போதைய பிஎச்டி ஆய்வு வரை உதகை அரசுக் கல்லூரியில் பயின்று வருகிறேன். இந்தியாவில், இதுவரை இந்த நுண்ணுயிரி அறியப்பட்டதாக ஆய்வுகள் இல்லை. உலகில் வெறும் ஆறு சிற்றினங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவையும், சுவிட்சர்லாந்து, சீனா மற்றும் கொரியாவின் குளிர்ச்சி மிகுந்த அதிக உயரமான பகுதிகளில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. ‘ஸ்பிரிங்டெயில்ஸ்’ என பொதுவாக அழைக்கப்படும் இந்த மண் நுண்ணுயிரி 1 மி.மீ நீளம் கொண்டது.

இந்த வகை நுண்ணுயிரிகள் மண்ணில் உள்ள கழிவுப் பொருட்களை மக்கச்செய்து, மண்ணுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்றன. மாசுபடாத மண்ணில் இருந்தே, இந்த நுண்ணுயிரி கண்டறியப்பட்டுள்ளது.

அதே சமயம், விவசாய நிலங்கள் மற்றும் கழிவுகள் கொட்டப்படும் மண்ணில் இவை காணப்படவில்லை. இந்தப் புதிய சிற்றினம், சீனாவில் கண்டறியப்பட்ட சிற்றினத்துடன் ஒத்துள்ளது. இது குளிர்ந்த வெப்பநிலையில் பால் மற்றும் பாலில்லா இனப்பெருக்கம் செய்யக்கூடியது. இந்த நுண்ணுயிரி தொடர்பான ஆய்வுக் கட்டுரை, ‘ஸ்லோவாக் அகாடமி ஆஃப் சயின்ஸ்’ அமைப்பு மூலம் வெளியிடப்பட்ட ‘பயாலாஜியா’ எனப்படும் சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக கண்டறியப்பட்ட இந்த நுண்ணுயிரியின் ஆண் மற்றும் பெண் உயிரியின் மாதிரிகள் குறிப்புகளுக்காக கொல்கத்தாவில் உள்ள ‘ஜூவாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா’ அமைப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

உதகை அரசு கலைக் கல்லூரி விலங்கியல் துறை இணை பேராசிரியர் சனில் கூறும்போது, ‘‘இந்த பூச்சியினத்தால் பறக்க முடியாது. உலக அளவில், நீலகிரியில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x