Published : 07 Jul 2021 03:13 AM
Last Updated : 07 Jul 2021 03:13 AM

கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்காக கே.நாராயணசாமியின் ‘கோவிட் புனர்வாழ்வு கையேடு’- சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்காக மருத்துவர் கே.நாராயணசாமி எழுதிய கோவிட் ‘(கரோனா) புனர்வாழ்வு கையேட்டை’ சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

கிண்டி அரசு கரோனா மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் கே.நாராயணசாமி எழுதிய, ‘கோவிட் (கரோனா) புனர்வாழ்வு கையேடு’ வெளியீட்டு நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கையேட்டை வெளியிட, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பெற்றுக்கொண்டார். சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கிண்டி அரசு கரோனா மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் கே.நாராயணசாமி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, ஜப்பான் டோக்கியோ தமிழ்ச்சங்கம், ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் வழங்கிய ரூ.18 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள், ரூ.6 லட்சம் மதிப்புள்ள நவீன ரத்த பரிசோதனை கருவிகளை அமைச்சர் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, கடந்த ஆண்டு ஜூலை மாதம் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. இதுவரை இந்த மருத்துவமனையில் 20,264 பேர் அனுமதிக்கப்பட்டு, 18,914 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு மிகப்பெரிய மருத்துவ சேவையை இந்த மருத்துவமனை செய்து வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை அளித்தாலும், கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். கரோனாவை குணப்படுத்தும் முதல் மருத்துவமனையாக இந்த மருத்துவமனை சிறப்பு பெயர் பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையத்தை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, முதல் கட்டமாக கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் கே.நாராயணசாமி உடனடியாக 15 துறைகளை உள்ளடக்கிய கரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையத்தை அமைத்தார். இந்த மையத்தின் மூலம் தினமும் 30-க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி மனநல ஆலோசனை வழங்குவது, யோகா பயிற்சி, உடல்நலனை கவனிக்கும் முறை போன்றவற்றில் கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடன் நாராயணசாமி மருத்துவ சேவை செய்து வருகிறார்.

இதற்கிடையில், கரோனாவுக்கு பின்னர் எந்த மாதிரியான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதற்கான தீர்வுகள் குறித்து ‘கோவிட் புனர்வாழ்வு கையேடு’ என்ற புத்தகத்தை மருத்துவர் நாராயணசாமி எழுதியுள்ளார். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு சிறந்த கையேடு. இந்த புத்தகத்தை ஒரு முறை படித்துவிட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரிந்துவிடும்.

மொத்தம் 650 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் தற்போது 120 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x