Last Updated : 07 Jul, 2021 03:13 AM

 

Published : 07 Jul 2021 03:13 AM
Last Updated : 07 Jul 2021 03:13 AM

வங்கி கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ் ஆப்பில் ‘லிங்க்’அனுப்பி பணம் திருட்டு: தமிழகத்தில் வடமாநில இளைஞர்கள் மீது அதிகரிக்கும் புகார்

இணைய வழியைப் பயன் படுத்தி அப்பாவி மக்களை வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர்.

சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஏடிஎம் மைய மோச டியில் வடமாநில இளைஞர் ஒருவர் சிக்கினார். அவர் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்த வரிசையில் தமிழகத்தில் தற்போது பேஸ்புக், வாட்ஸ் ஆப் மூலம் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து புது மோசடி நடப்பது குறித்த புகார்கள் அதிகரித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது:

இணைய வழியை பயன்படுத்தி வடமாநில இளைஞர்கள் சிலர் சைபர் கிரைம் குற்றத்தில் ஈடு படுகின்றனர். பேஸ் புக்கிலுள்ள புகைப்படங்களை திருடி ஒரு குரூப் உருவாக்கி அதன் மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அவதிப்படுவது போன்ற சில படங்களை பதிவேற்றுகின்றனர். மேலும் மருத்துவ செலவுக்குப் பணம் தேவை எனக் குறிப்பிடுகின்றனர். இதைப் பார்க்கும் நன்கொடை யாளர்கள் குறிப்பிட்ட குரூப்பில் இடம் பெற்றுள்ளவரின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்புகின்றனர். ஓரிருவர் பணம் அனுப்பிவிட்டு, கிடைத்ததா என விசாரிக்கும்போது, அது போலி எனத் தெரிந்து எங்களிடம் புகார் அளிக்கின்றனர்.

மதுரை நகர், புறநகரில் இது போல் பத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இது மாதிரியான செயல்களைத் தடுக்க பேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் தங்களது புகைப்படங்கள், குடும்பத்தினரின் படங்களை புரொபைலாக வைப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் வங்கிகளில் இருந்து ‘உங்களது வங்கிக் கணக்கு, ஏடிஎம் ரகசிய எண் காலாவதியாகிவிட்டது என சம்பந்தப்பட்ட வங்கி முத்தி ரையுடன் ‘லிங்க்’ஐ வாட்ஸ்ஆப் குரூப்பில் அனுப்பும் மோசடி கும் பலைச் சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ஓடிபி எண்களைப் பெற்று அடுத்த நிமிடமே பணத்தை திருடுகின்றனர். இது போன்ற மோசடிகளில் பெரும்பாலும் வடமாநில இளைஞர்களே ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தவிர்க்க மக்கள் விழிப் புணர்வுடன் இருக்க வேண்டும். முன்பின், தெரியாதவர்களின் தகவலுக்கு எந்த பதிலும் அளிக்கக்கூடாது. தங்களது வங்கி விவரங்களைப் பகிருவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x