Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 03:13 AM

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

சென்னை

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக பலரும் சமுதாயம், அரசியல் உள்ளிட்டவை சார்ந்த ஆக்கப்பூர்வமான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், சிலர் சுய விளம்பரத்துக்காக ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவு செய்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தூண்டி வருகின்றனர். இத்தகைய அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைப்பதற்கும், குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கும் வித்திடுகின்றன.

இவ்வாண்டு மே மாதம் முதல் தற்போது வரையில் மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்ட நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் எல்லை மீறிய அளவில் அவதூறுப் பதிவுகளை மேற்கொண்ட 16பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகள் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்குக்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில் முகாந்திரம் இருக்கும் பட்சத்திலும் மட்டுமே காவல் துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x