Last Updated : 06 Jul, 2021 03:14 AM

 

Published : 06 Jul 2021 03:14 AM
Last Updated : 06 Jul 2021 03:14 AM

கும்பகோணம் கோட்டத்திலிருந்து பிரித்து திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய போக்குவரத்துக் கோட்டம் உருவாக்க வலியுறுத்தல்

திருச்சி

கும்பகோணம் கோட்டத்திலிருந்து 5 மாவட்டங்களைப் பிரித்து திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய போக்குவரத்துக் கோட்டம் உருவாக்கப்பட வேண் டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தின் கீழ் கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, கரூர், நாகை ஆகிய 6 மண்டலங்கள் உள்ளன. இந்தக் கோட்டத்தின் கட்டுப்பாட்டில், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட் டத்தில் இருந்து சுமார் 3,645 வழித்தடங்களில் 1,257 நகரப் பேருந்துகள், 1,927 புறநகர் பேருந் துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கானல் நீரான ஸ்ரீரங்கம் கோட்டம்

இதற்கிடையே, அரசுப் போக்கு வரத்துக் கழகத்தில் தமிழகத் திலேயே மிகப்பெரிய கோட்டமாக விளங்கும் கும்பகோணத்திலிருந்து சில மாவட்டங்களைப் பிரித்து, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டத்தை உருவாக்க வேண்டுமென திருச்சி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

2014-15-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி கும்பகோணம் கோட்டத்தைப் பிரித்து ரங்கத்தை தலைமை யிடமாகக் கொண்டு புதிய கோட்டம் உருவாக்கப்படும் என அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். ஆனால் அதற்குப் பிறகு இந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டது. இதனால் திருச்சி மக்களின் இக்கோரிக்கை கானல் நீராகவே இருந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் தனி போக்குவரத்துக் கோட்டம் என்ற கோரிக்கையை மக்கள் எழுப்பி வருகின்றனர்.

புறக்கணிக்கப்படும் திருச்சி

இதுகுறித்து திருச்சி மாநகர வளர்ச்சிக் குழும நிர்வாகக்குழு உறுப்பினர் ஷ்யாம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் தனி போக்குவரத்துக் கோட்டம் இருப்பதால், அங்கு பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் நன்றாக உள்ளன. ஆனால் திருச்சி மட்டும் புறக்கணிக்கப்பட்டதால், இங்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. கும்பகோணம் கோட்டத்திலேயே திருச்சி மண்டலம்தான் அதிக வருமானம் தரக் கூடியதாக உள்ளது.

எனவே, திருச்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நிச்சயம் திருச்சிக்கென தனி கோட்டத்தைப் பெற்றுத் தருவார்கள் என நம்புகிறோம்’’ என்றார்.

எதிர்கால வளர்ச்சிக்கு அவசியம்

இதுகுறித்து சாலை பயனீட்டாளர்கள் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் அல்லூர் அய்யாரப்பன் கூறும்போது, ‘‘திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டம் உருவாக்கினால் புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள், புதிய வழித்தடங் கள் கிடைக்கும். மேலும் சிறு நகரங்களில்கூட புதிதாக பணி மனை அமைக்கவும் வாய்ப்பு கிடைக்கும்’’ என்றார்.

சாத்தியக்கூறுகள் அதிகம்

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏற்கெனவே கடும் நிதிச்சுமையில் சிக்கித் திணறி வரும் நிலையில் புதிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டால் அதற்கான அலுவலகம், பணியாளர்கள், பராமரிப்பு உள்ளிட்டவற்றால் கூடுதல் செலவினங்கள் ஏற்படும். இதனால் வாய்ப்பு குறைவு என்றபோதிலும், கும்பகோணம் பெரிய கோட்டமாக இருப்பதால் அதை இரண்டாகப் பிரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. அரசுதான் இதுபற்றி முடிவெடுக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x