Published : 05 Jul 2021 02:26 PM
Last Updated : 05 Jul 2021 02:26 PM

தமிழக அரசு ஓராண்டில் ரூ.1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக கடன் வாங்க நேரிடும்: பாமக நிழல் பட்ஜெட்டில் தகவல்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

2021-22ஆம் ஆண்டில் தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக கடன் வாங்க நேரிடும் என, பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக அரசுக்கான 2021 - 2022ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை இன்று (ஜூலை 05) காணொலிக் காட்சி வாயிலாக வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்:

"வரவு - செலவு

1. 2021-22ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் வரவுகள் ரூ.4,98,585 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவைவிட ரூ.2,22,125 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களைச் சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,09,945 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.

2. நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.5,05,786 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4,27,426 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாகச் செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காகப் புதிதாக வாங்கப்படும் கடன் மிக மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும்.

3. 2021-22ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.71,159 கோடி உபரியாக இருக்கும். நிதிப் பற்றாக்குறை ரூ.7,201 கோடி என்ற அளவில் மிகமிகக் குறைவாக இருக்கும். வருவாய்க் கணக்கில் உபரியாக இருக்கும் தொகை மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்பதால் நிதிப் பற்றாக்குறை பெருமளவில் குறைந்திருக்கிறது.

தமிழக பொருளாதாரம் - ஓர் ஆய்வு!

4. கரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் தமிழகத்தின் பொருளாதாரம் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதுதான் இன்றைய நிலையில் உடனடித் தேவை என்பதால், அதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

5. தமிழகத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு 2021-22ஆம் ஆண்டில் ரூ.23 லட்சம் கோடி என்ற இலக்கை எட்டியிருக்க வேண்டும். ஆனால், ரூ.20 லட்சம் கோடி என்ற இலக்கை அடையப் போராட வேண்டியிருக்கும்.

6. 2020-21ஆம் ஆண்டில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் இலக்கைவிட 17.64% வீழ்ச்சி அடைந்து, ரூ.1,09,968 கோடியாகக் குறைந்துள்ளது. மொத்த வருவாய் 17.63% வீழ்ச்சியடைந்து ரூ.1,80,700 கோடியாகக் குறைந்துள்ளது.

7. 2020-21 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.21,617.61 கோடி என்ற இலக்கைவிட 3 மடங்கு அதிகரித்து, ரூ.65,994.06 கோடி என்ற உச்சத்தை அடைந்துள்ளது. அதேபோல், நிதிப் பற்றாக்குறையும் ரூ.59,346.29 கோடி என்ற இலக்கைக் கடந்து, ரூ.96,889.97 கோடியாக அதிகரித்துள்ளது.

பொருளாதார மந்தநிலை தொடரும்

8. 2021-22 ஆம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ.1,35,641.78 கோடியாகவும், மொத்த வருவாய் ரூ.2,18,991.96 கோடியாகவும் இருக்க வேண்டும். ஆனால், இந்த இலக்கை எட்ட முடியாது.

9. நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை ரூ.84,202.39 கோடியாகவும் இருக்க வேண்டும். ஆனால், இவை இன்னும் கூடுதலாக அதிகரிக்கும்.

ஓராண்டில் ரூ.1 லட்சம் கோடி கடன்

10. 2021-22 ஆம் ஆண்டில் தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக கடன் வாங்க நேரிடும்.

11. 2021 - 22 ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ.6 லட்சம் கோடியாகவும், பொதுத்துறை நிறுவனக் கடன் ரூ.4 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும். மொத்த கடன் ரூ.10 லட்சம் கோடியாக இருக்கும்.

12. நடப்பாண்டின் முடிவில் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1,27,388.54 கடன் இருக்கும். 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பெயரில் ரூ.5,09,554 கடனை அரசு வாங்கியிருக்கும்.

வட்டி மட்டும் ரூ.85,000 கோடி

13. 2021-22 ஆம் ஆண்டில் வட்டியாக மட்டும் ரூ.85,000 கோடி செலுத்த வேண்டியிருக்கும். இதில், நேரடிக் கடனுக்கான வட்டி ரூ.51,000 கோடி; பொதுத்துறை நிறுவனக் கடன்களுக்கான வட்டி ரூ.34,000 கோடி; ஒவ்வொரு நாளும் ரூ.232 கோடி கடன் செலுத்த வேண்டியிருக்கும்.

பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கை

14. அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக 10 விழுக்காடுகளுக்கும் கூடுதலான ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும்.

15. மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% பங்கு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

16. மத்திய அரசு வசூலிக்கும் மேல்வரி, கூடுதல் தீர்வை போன்றவை அடிப்படை வரியோடு இணைக்கப்பட வேண்டும். அதன் மூலம், அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்தும் மாநில அரசுகளுக்கு பங்கு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் சிறப்பாண்டு

17. 2021-22 ஆம் ஆண்டை விரைவான நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் சிறப்பாண்டாகக் கடைப்பிடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

18. தமிழகத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பை அடுத்த 5 ஆண்டுகளில், அதாவது 2025-26 ஆம் ஆண்டில் 32 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

19. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி என்ற அளவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்படும்.

20. 5 இடங்களில் ஆயத்த ஆடை பூங்காக்கள் அமைக்கப்படும். ஆயத்த ஆடை ஏற்றுமதி அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்.

21. நான்காம் தொழில்நுட்பப் புரட்சியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வேலைவாய்ப்பும் ஏற்றுமதியும் அதிகரிக்கப்படும்.

வரியில்லா வருவாய் ரூ.2.09 லட்சம் கோடி

22. 2021-22ஆம் ஆண்டில் வரியில்லா வருவாய் ரூ.2.09 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.

23. கிரானைட், தாதுமணல் விற்பனை மூலம் ரூ.1 லட்சம் கோடியும், மணல் இறக்குமதி, செயற்கை மணல் விற்பனை ஆகியவற்றின் மூலம் ரூ.25,000 கோடியும் ஈட்டப்படும்.

24. பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயங்கச் செய்வதன் மூலம் ரூ.25,000 கோடி கிடைக்கும்.

25. பிற ஆதாரங்களில் இருந்து வரியில்லா வருவாயை கணிசமாக பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

26. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x