Published : 27 Feb 2016 09:13 AM
Last Updated : 27 Feb 2016 09:13 AM

தேசிய பணித்திறன், விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற 134 போலீஸாருக்கு பரிசு: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

தேசிய அளவில் காவல்துறையின ருக்கான பணித்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 134 தமிழக காவல் துறையினருக்கு ரூ.1 கோடியே 46 லட்சத்து 80 ஆயிரத்துக்கான பரிசுத் தொகையை முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.

இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காவல்துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக காவல் துறையினருக்கு பரிசுகள் வழங்கும் விழா தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. போட்டிகளில் வென்ற தமிழக போலீஸாருக்கு முதல்வர் பாராட்டுகளை தெரிவித்து பரிசுகளை வழங்கினார்.

63-வது அகில இந்திய காவலர் நீச்சல் போட்டி, டெல்லியில் கடந்தாண்டு ஏப்ரல் 20 முதல், 24-ம் தேதி வரை நடந்தது. இதில் பங்கேற்று வெண்கலம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த நால்வருக்கு ரூ.6 லட்சத்து 45 ஆயிரம் வழங்கினார்.

11-வது, 14-வது, 15-வது அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில், தமிழ்நாடு காவல் துப்பாக்கி சுடும் குழு, மாநிலங்களுக்கிடையிலான சிறந்த அணிக்கான தமிழ்நாடு முதல்வர் கோப்பையை வென்றது. இந்த அணியில் இடம் பெற்ற 45 பேருக்கு ரூ.40 லட்சம் வழங்கினார்.

ஹரியாணா மாநிலத்தில் மதுபன், கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரம் ஆகிய இடங் களில் 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் நடந்த 63-வது மற்றும் 64-வது அகில இந்திய தடகளம் மற்றும் கோலூன்றி உயரம் தாண்டுதல் போட்டிகளில் வென்ற 5 காவலர்களுக்கு ரூ.19 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

டெல்லியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த 63-வது அகில இந்திய மல்யுத்தம், ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வெண்கல பதக்கங்கள் வென்ற 3 காவலர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசுத் தொகையை முதல்வர் வழங்கினார்.

மேலும், 64-வது பி.என்.மாலிக் நினைவு அகில இந்திய கால்பந்து விளையாட்டுப் போட்டியில் தமிழக காவல்துறை 3-ம் இடம்பெற்றது, இதில் பங்கேற்ற 22 காவல்துறை யினருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் வழங் கினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 2011-ல் நடந்த அதிரடிப்படை போட்டியில் தமிழகம் 2-ம் இடத்துக்கான கோப்பையை பெற்றது. இதில் பங்கேற்ற 23 பேருக்கு ரூ.7 லட்சத்து 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

பஞ்சாபில் கடந்த ஆண்டு நடந்த காவல் திறனாய்வு போட்டியில் வென்ற தமிழக அணியில் இடம் பெற்ற 32 பேருக்கு ரூ.64 லட்சம் பரிசுத் தொகை என, 134 பேருக்கு ஒரு கோடியே 46 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை முதல்வர் வழங்கினார்.

அப்போது முதல்வர் ஜெய லலிதா, “நீங்கள் அனைவரும் இத்தகைய போட்டிகளில் பல முறை பங்கேற்று திறமைகளை காட்டி பரிசுகளை வென்று காவல் துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும்’’ என வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன், ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, டிஜிபி அசோக்குமார், சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

10 மடங்கு உயர்வு !

காவலர்களுக்கான அகில இந்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த 2004-ம் ஆண்டு முதல் தங்கப் பதக்கத்துக்கு ரூ.50 ஆயிரம், வெள்ளிக்கு ரூ.30 ஆயிரம், வெண்கலத்துக்கு ரூ.20 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. இதை கடந்த கடந்த 2013 முதல் 10 மடங்காக உயர்த்தி, தங்கம் வென்றவர்களுக்கு ரூ.5 லட்சம், வெள்ளிக்கு ரூ.3 லட்சம், வெண்கலத்துக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் குழு போட்டிகளில் முதல் 3 இடங்களுக்கான கோப்பைகளை வென்றால் அணியில் உள்ள வீரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், 30 ஆயிரம், 20 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x