

டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கும் விற்பனைக்கும் இலக்கு நிர்ணயிக் கிறார்கள். ஆனால், கல்விச்சாலைகளை திறக்க இலக்கு கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் வேதனை தெரிவித்தார்.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பில் ‘உலக வர்த்தக அமைப்பின்கீழ் கல்வி: பேரழிவில் குடியரசு’ என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் நேற்று நடந்தது. கருத்தரங்கை தொடங்கிவைத்து உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் பேசியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என இரண்டு விதமான பள்ளிகள் மட்டுமே இருந்தன. ஆனால், 1980--ம் ஆண்டின் இறுதிக்குப் பின்னர் வந்த புதிய கல்விக்கொள்கை, கல்வியை அரசின் பிடியில் இருந்து விடுவித்து தனியாரிடம் அளித்தது. இன்றைய தினம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும், சிபிஎஸ்இ பள்ளிகளும் புற்றீசல்கள் போல வந்துவிட்டன.
இன்றைய தினம் டாஸ்மாக் கடைகளை தொடங்குவதற்கும் விற்பனைக்கும் இலக்கு நிர்ணயிக்கிறார்கள். ஆனால், கல்விச்சாலைகளை தொடங்குவதற்கு எந்த இலக்கும் கிடையாது. கல்வி வணிகமயமாகி வருவது குறித்து மக்களுக்குப் புரியும் வகையில் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி அரி பரந்தாமன் கூறினார்.
சென்னை கணித அறிவியல் நிறுவன விஞ்ஞானி ஆர்.ராமானுஜம், கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் பேராசிரியர் அனில்சடகோபால், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.செந்தில்நாதன் ஆகியோர் பேசினர்.
படத் திறப்பு
முன்னதாக, அம்பேத்கர் படம் மற்றும் இந்திய அரசமைப்பு சட்ட முகப்புரை தாங்கிய பலகையை பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் ஐ.பி.கனகசுந்தரமும், அண்மையில் உயிரிழந்த ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் விமுலாவின் படத்தை அந்த அமைப்பின் பொதுச்செயலாளரான பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் திறந்துவைத்தனர். நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் பி.ரத்தினசபாபதி தலைமை தாங்கினார். செயலாளர் வே.மணி வரவேற்றார். கருத்தரங்கில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.