Published : 03 Jul 2021 03:13 AM
Last Updated : 03 Jul 2021 03:13 AM

கரோனா 2-வது அலையில் 400 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கிய சென்னை தன்னார்வலர் குழு

தமிழகத்தில் கரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தபோது, சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் காத்திருந்த 400 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி சென்னை தன்னார்வலர் குழு உதவி செய்துள்ளது.

இதுகுறித்து அக்குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் மனோஜ் செல்வராஜ் கூறியதாவது: கடந்த மே மாதத்தில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. பல மருத்துவமனைகளில படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்தனர். அப்போது, சமூக நல்லிணக்க அறக்கட்டளை, காக்கை, சுமைதாங்கி அறக்கட்டளைகள் இணைந்து, மருத்துவமனையில் காத்திருக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் சேவையைத் தொடங்கினோம்.

பின்னர், பல்வேறு தன்னார்வ அமைப்புகளை இணைத்து சென்னை தன்னார்வலர் குழுவை உருவாக்கினோம். ஆக்சிஜன் சிலிண்டர்களை தொழிற்சாலைகளிலிருந்து வாடகைக்கு எடுத்து, அதில் ஆக்சிஜனை நிரப்பி, மருத்துவமனைகளில் காத்திருந்த நோயாளிகளுக்கு வழங்கினோம். இதன் மூலம் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் 400-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டி கருவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், மருத்துவமனையில் காத்திருக்கும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு உணவு, ஊட்டசத்து பானங்கள் வழங்கப்பட்டன. மருத்துவர், மருத்துவமனை ஊழியர்கள் , தூய்மைப் பணியாளர்கள் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு, முகக்கவசங்கள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். சுமைதாங்கி அறக்கட்டளை நிர்வாகி ஜெயலட்சுமி, பள்ளிக்கரணை ஹோட்டல் பெரியதச்சூர் நிர்வாகம் உள்ளிட்டோர் உதவியுடன் 27 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x