Last Updated : 02 Jul, 2021 05:49 PM

 

Published : 02 Jul 2021 05:49 PM
Last Updated : 02 Jul 2021 05:49 PM

கோவை குளங்களில் புரிதல் இல்லாமல் நடைபெற்ற கான்க்ரீட் பணி: ஆய்வுக்குப் பின் கார்த்திகேய சிவசேனாபதி குற்றச்சாட்டு

கோவை வாலாங்குளத்துக்குள் நடைபெற்றுவரும் பணிகளை இன்று ஆய்வு செய்த திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்டோர். படம்:ஜெ.மனோகரன்.

கோவை

பறவைகள், பல்லுயிர்கள் எப்படி வாழும் என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் கோவை குளங்களில் பணிகள் நடைபெற்றதாகத் திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

கோவை குளங்களில் நடைபெறும் கான்க்ரீட் பணியால் பல்லுயிர்ப் பெருக்கம் பாதிக்கப்படுவதாக 'இந்து தமிழ்' நாளிதழில் கடந்த 24-ம் தேதி விரிவான செய்தி வெளியானது. அதில், “குளக்கரையில் கான்க்ரீட் அமைப்பது சரியான வழிமுறை அல்ல. தேர்தல் நேரத்திலும் இதுதொடர்பாகப் பலமுறை பேசியுள்ளேன். குளங்களில் கான்க்ரீட் கரை அமைப்பது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்” எனத் திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலலாளர் கார்த்திகேய சிவசேனாபதி உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், கோவை மாநகர் பகுதிகளில் அமைந்துள்ள வாலாங்குளம், குறிச்சி குளம், உக்கடம் பெரியகுளம் உள்ளிட்ட குளங்களில் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் திமுக சுற்றுசூழல் அணியினர் இன்று (ஜூலை 2) நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப்பின் கார்த்திகேய சிவசேனாபதி கூறும்போது, "கடந்த 10 ஆண்டுகளாகக் குளங்களின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குளத்தின் பரப்பளவு பெரிய அளவில் சுருங்கி உள்ளது. கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல், பல இடங்களில் நேரடியாகக் குளங்களுக்குள் செலுத்தப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், குளங்களில் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு எதிரான வகையில் கரைகளுக்கு கான்க்ரீட் போடுதல் உள்ளிட்ட தேவையற்ற பணிகளால் குளங்களின் உயிர்ச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெறும் குளங்களுக்குள் 15 முதல் 20 சதவீதம் வரை தேவையில்லாமல் மண் கொட்டி, பரப்பளவைச் சுருக்கியுள்ளனர். குளத்தின் இயற்கையான சூழலில் பறவைகள், பல்லுயிர்கள் எப்படி வாழும் என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமலும், கழிவுநீர்க் கலப்பைத் தடுக்க வழிகள் இல்லாமலும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

வரும் நாட்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் நொய்யல் வழித்தடத்தில் உள்ள அனைத்துக் குளங்களிலும் இதேபோன்று ஆய்வு செய்யப்படும். ஆய்வு செய்து அந்த அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் அளிக்கப்படும்.

குளங்களின் உயிர்ச்சூழல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் பாதிக்கப்படாத வகையில் திருத்தங்கள் செய்யப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ள ஆவன செய்யப்படும்" என்று கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x