Published : 02 Jul 2021 03:30 PM
Last Updated : 02 Jul 2021 03:30 PM

இந்தியன்-2 பட விவகாரம்; இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா தாக்கல் செய்த மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை

இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரிய லைகா நிறுவனம் தாக்கல் செய்த இடைக்கால மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வந்த இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இயக்குநர் ஷங்கர் பிற படங்களை இயக்க இடைக்காலத் தடை கோரியும், உத்தரவாத தொகை செலுத்தக்கோரியும் லைகா தரப்பில் இரு இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது, லைக்கா தரப்பில், “படத்திற்கு முதலில் 150 கோடி ரூபாய் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறோம். ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருக்கிறது.

இயக்குநர் சங்கருக்கு ஏற்கனவே 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதத் தொகையை வழங்கவும் தயாராக இருக்கிறோம். கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது”. எனக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இயக்குநர் ஷங்கர் தரப்பில், “படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியது. அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், லைகா நிறுவனம் படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தியது.

படப்பிடிப்புக்கு அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீடில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது. இதற்கிடையில் நடிகர் கமலுக்கு ஏற்பட்ட மேக் அப் அலர்ஜி, இதுதவிர படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, கரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானது

மேலும், படப்பிடிப்பை மீண்டும் துவங்கினால் வரும் அக்டோபர் மாதத்திற்குள் படத்தை முடித்து கொடுக்க தயார்”. எனத் தெரிவிக்கபட்டது.

இந்த வழக்கில் இருதரப்புக்கும் இடையே தீர்வு காணும் மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்து நீதிபதி உத்தரவிட்டுடிருந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இடைக்கால மனுக்கள் மீது இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, லைகாவின் இரு இடைக்கால மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிபதி பானுமதி மத்தியஸ்த அறிக்கை தாக்கல் செய்த பிறகு பிரதான வழக்கு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x