Published : 02 Jul 2021 03:13 AM
Last Updated : 02 Jul 2021 03:13 AM

தடுப்பூசி மருந்து குறைவாக இருந்ததால் ஈரோட்டில் நள்ளிரவு முதல் காத்திருந்த மக்கள் ஏமாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் 80 இடங்களில் தலா 100 கரோனா தடுப்பூசிகள் மட்டும் நேற்று போடப்பட்டதால், நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4.22 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி சென்று சேரும் வகையில் மாநகராட்சியில் ஒரு நாளைக்கு 20 வார்டுகள் என்ற அடிப்படையிலும், 14 ஒன்றியங்களில் ஊராட்சிகள் வாரியாகவும் பிரித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மருந்து கையிருப்பில் இல்லாததால், கடந்த 27, 28-ம் தேதிகளில் தடுப்பூசி போடப்படவில்லை. 29-ம் தேதியன்று 10 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், 30-ம் தேதி இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தடுப்பூசி மருந்துகள் வந்த நிலையில், நேற்று மாவட்டத்தில் 80 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தடுப்பூசி போடும் மையங்களின் முன்பு வரிசையில் காத்திருந்தனர்.

ஒவ்வொரு மையத்திலும் தலா 100 டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டதால், பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும், சில நாட்களாகவே மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால், இரண்டாம் டோஸ் போடும் முறை வந்தவர்கள் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சேலத்தில் இருப்பு இல்லை

சேலம் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் 135 மையங்களில் கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மையங்களிலும் தினமும் 200 பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பால் மையங்களில் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் நின்று மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமுடன் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x