Published : 02 Jul 2021 03:14 AM
Last Updated : 02 Jul 2021 03:14 AM

புதுவை விமான நிலையத்தில் வைத்திலிங்கம் எம்பி ஆய்வு

புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் புதுச்சேரி விமான நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விமான நிலைய இயக்குநர் விஜய் உபாத்யாவிடம் விமான நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

விமான நிலைய இயக்குநர் விஜய் உபாத்யா, "புதுச்சேரியில் விமான நிலையம் 90 பேர் பயணிக்கக்கூடிய ஏடிஆர் ரக விமானங்களை இயக்க தயாராக இருக்கிறது. தற்போது 1,500 மீட்டர் நீளமுள்ள ஓடுதளத்தை 1,850 மீட்டர் ஆகவும், ஓடுதளத்தை ஒட்டி காலியாக உள்ள இடத்தை 90 மீட்டரில் இருந்து 140 மீட்டராகவும் நீட்டிக்க வேண்டும். அத்துடன் விமான நிலையத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் உயரமாக வளர்ந்துள்ள மரங்களையும் அகற்றினால் 120 பேர் பயணிக்கக்கூடிய ஏர் பஸ் 319 வகையிலான விமானத்தையும் புதுச்சேரி விமான நிலையத்தில் இயக்க முடியும்" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து வானூர் வட்டாட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எம்பி வைத்திலிங்கம் பேசினார். அதனடிப்படையில் புதுச்சேரி விமான நிலைய அதிகாரிகளுடன் இணைந்து வானூர் வட்டாட்சியர் மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக எம்பி தரப்பில் குறிப்பிட்டனர்.

இதுபற்றி வைத்திலிங்கம் கூறுகையில், "கரோனாவால் புதுச்சேரியில் நிறுத்தப்பட்டுள்ள விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏடிஆர் ரக விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுடன் புதுச்சேரி அரசு பேச வேண்டும். ஏற்கெனவே புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்திற்கு சென்ற விமானங்கள் அனைத்தும் 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன, அதுபோல் பெங்களூருக்கும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பயணிகள் புதுச்சேரியில் இருந்து விமானத்தில் பயணித்துள்ளனர். இதனால் புதுச்சேரியில் விமானத்தை இயக்கும் நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்படாது, அரசும் மானியம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகாது" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x