Last Updated : 01 Jul, 2021 05:25 PM

 

Published : 01 Jul 2021 05:25 PM
Last Updated : 01 Jul 2021 05:25 PM

சுருக்குவலைக்கு எதிர்ப்பு; புதுச்சேரியில் மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு பூட்டு, முற்றுகை: அதிகாரிகள் சிறைபிடிப்பு

சுருக்குவலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு அதிகாரிகள் வெளியே வரவிடாமல் சிறை பிடிக்கப்பட்டு முற்றுகை போராட்டம் நடந்தது.

மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு சுருக்கு வலையை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது புதுச்சேரியில் மொத்தம் 18 மீனவ கிராமங்களில் ஒரு கிராமத்தினர் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதாகக்கூறி சட்டப்பேரவையில் நேற்று மீனவர்களின் ஒருபிரிவினர் குவிந்தனர். அவர்களிடம் பேரவைத்தலைவர் செல்வம், பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, சுருக்குவலை பயன்படுத்த வாய்மொழியாக அனுமதி தந்தனர். இதுதொடர்பாக மீனவ பஞ்சாயத்தார் கடிதம் எழுதி அந்தந்த எம்எல்ஏவிடம் தரக்கூறினர்.

சுருக்குவலை பயன்படுத்த வாய்மொழியாக அனுமதி அளித்ததற்கு மற்றொரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று எந்திர விசைப்பபடகு உரிமையாளர்கள் சங்கத்தினர் தேங்காய்திட்டில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சுருக்குவலைத் தொடர்பாக மீன்வளத்துறை இயக்குநர் பதில் ஏதும் தரவில்லை. இதையடுத்து அவர்கள் அலுவலக வாயிலில் அமர்ந்து மீன்வளத்துறை இயக்குனருக்கு எதிராகவும் சுருக்குவலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர் தொடர்ந்து அலுவலக வாயிலுக்கு பூட்டு போட்டு மூடி அதிகாரிகளை சிறைபிடித்தனர். முத்தியால்பேட்டை போலீஸார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மீன்வளத்துறைச் செயலர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கோரினர்.

போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில்," மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடித்தடைக்காலம் நடைமுறையில் உள்ளது. மீன்குஞ்சுகளைக்கூட பிடிக்கும் சுருக்குவலைக்கு தடை உள்ளது. ஆனால், சுருக்குவலை விவகாரத்தில் மீனவர்களிடத்தில் பிரிவினை உருவாக்கப்படுகிறது. சட்டப்படி வெளிப்படையாக அதிகாரிகள் செயல்படுவதில்லை. அதைக்கண்டித்து சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபடுகிறோம். அடுத்தக்கட்டமாக சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம்" என்று குறிப்பிட்டனர்.

தற்போது கடலோர தொகுதிகளின் எம்எல்ஏக்களில் பலர் டெல்லி சென்றுள்ளதால், அனைவரும் புதுச்சேரி திரும்பிய பிறகு எம்எல்ஏக்கள், அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதி தரப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x