Published : 01 Jul 2021 01:29 PM
Last Updated : 01 Jul 2021 01:29 PM

ஆன்லைன் விளையாட்டுகளில் மாணவர்கள் அடிமையாகும் நிலை; கோப மனநிலையில் பெற்றோர், பெரியோரிடம் பேசுவது குறைகிறது: உயர் நீதிமன்றம் வேதனை 

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகின்றனர், இதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்படுகிறது, வீட்டில் பெற்றோர், பெரியோரிடம் பேசுவது குறைகிறது, மத்திய, மாநில அரசுகள் தான் ஆன்லைன் விளையட்டை தடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன், கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுக்களை தடை செய்யவும், இதுதொடர்பாக ஆய்வு செய்து கண்காணிப்பதற்கான நடைமுறையை கொண்டு வரக்கோரியும் மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் விளையாட்டுக்களால் குழந்தைகளும், இளம் பருவத்தினரும், மாணவர்களும் விளையாட்டுகளில் உள்ள கதாப்பாத்திரங்களாக மாறிவிடுவதுடன், வன்முறை எண்ணங்களுக்கும் ஆளாகின்றனர் என வாதிட்டார்.

இதுபோன்ற விளையாட்டுகளில் பங்கேற்பவர்களை தவறாக பயன்படுத்துவதற்கு பப்ஜி மதன் போன்றவர்கள் மட்டுமே காரணம் இல்லை, நாடு முழுவதும் இந்த விளையாட்டில் பங்கேற்பவர்களும் காரணமாக அமைந்து விடுவதாக குறிப்பிட்டார். அவர்களை பாதுகாப்பதற்கான தகுந்த நடவடிக்கையை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அப்போது நீதிபதிகள், கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பலரும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர், அதேசமயம் ஆன்லைன் மற்றும் ஆப்லைப் விளையாட்டுகளுக்கும் அவர்கள் அடிமையாகி விடுவதாக வேதனை தெரிவித்தனர்.

படிப்பு மற்றும் விளையாட்டு போன்ற காரணங்களுக்காக, அதிக அளவில் மொபைல் மற்றும் கணினி பயன்படுத்தும் மாணவர்கள், அதிகப்படியான கோப மனநிலைக்கும், தற்கொலை முயற்சிக்கும் ஆளாவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் அரசுகள் தான் தடுக்க முடியும் எனத் தெரிவித்தனர்.

ஆன் லைன் விளையாட்டு மோகத்தால் பெற்றோர் மற்றும் பெரியோரிடம் கூட குழந்தைகள் பேசுவது குறைந்து வருவதாக கவலை தெரிவித்ததுடன், தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர் நேரத்தை செலவழிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

பின்னர் மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய மாநில அரசுகளிடம் மனுதாரர் 4 வாரங்களில் மனு அளிக்கவும், அதை 8 வாரங்களில் பரிசீலித்து உரிய முடிவெடுக்கும்படியும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x