Last Updated : 01 Jul, 2021 03:14 AM

 

Published : 01 Jul 2021 03:14 AM
Last Updated : 01 Jul 2021 03:14 AM

கரோனா ஊரடங்கில் கடந்த 52 நாட்களில் 3 ஆயிரம் பேருக்கு தினமும் 2 வேளை உணவு விநியோகம்: மனநிறைவு தருவதாக கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் உருக்கம்

சென்னை

கரோனா ஊரடங்கில் கடந்த 52 நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேருக்கு 2 வேளை இலவச உணவு வழங்கியது மனநிறைவு தருவதாக கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

சிறப்பான பணி மற்றும் மனித நேயம் கொண்ட போலீஸ் அதிகாரி என பெயர் பெற்றவர் தமிழக காவல்துறையின் கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ். 2017-ம் ஆண்டு சென்னை காவல்துறை ஆணையராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் பணி நிறைவு செய் தவர்.

அவர் ஆணையர் பொறுப்பில் இருக்கும்போதுதான் ‘மூன்றாம் கண்’ என்ற திட்டம் மூலம் சென்னைமுழுவதும் 10 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா என்ற வகையில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை நிறுவினார்.

தற்போது, இவர் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக கூடுதல் காவல்துறை இயக்குநராக உள்ளார். தற்போதைய கரோனா சூழலில் நாம் ஏதாவது ஒரு வகையில்உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இலவச உணவு வழங்கும் முயற்சியை மேற்கொண்டார். அதன்படி, நண்பர்களிடம் பெற்ற பணம் மற்றும் பொருட்களைக் கொண்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை உள்ளிட்ட 6 அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு மதியம் மற்றும் இரவு வேளைகளில் தரமானஉணவளிக்க முடிவு செய்தார். அதன்படி, வேளச்சேரி குருநானக் கல்லூரி செயலாளர் மற்றும் ஊர்காவல்படை சரக உதவி தளபதி மன்ஜித் சிங், சஞ்சய் பன்சாலி, வட்டார தளபதி ஆகியோரின் உதவியுடன் தினமும் 3 ஆயிரம் பேருக்குகுருநானக் கல்லூரியில் தரமானஉணவு தயாரிக்கப்பட்டது.

கடந்த மே 10 முதல் ஜுன் 30-ம்தேதி வரை அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் காவல்துறையினராலேயே கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது. இந்த பணியை திறம்பட செயல்படுத்திய காவலர்கள் மற்றும் பணியாளர்களை நேற்று நேரில் அழைத்து, அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார்.

இதுகுறித்து ஏ.கே.விஸ்வநாதன் கூறும்போது, ‘ஊரடங்கு காலத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உணவளிக்கும் திட்டத்தை தொடங்கினோம். 2015-ம்ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது 4 நாளில் 2 லட்சம் பேருக்குஉணவு தயாரித்து வழங்கினோம். அப்போது, நான் ஊர்காவல் படையில் இருந்தேன். குருநானக் கல்லூரியில் வைத்து உணவு தயாரிக்கப்பட்டது. அதேபோல் தற்போது 52 நாட்கள் தொடர்ந்து உணவு தயாரித்து வழங்கியுள்ளோம்.

கரோனா காலத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணி மகத்தானது. எனவே,அவர்களை நாம் கவனிக்கும்போது அவர்கள், தங்களது பணியை மேலும் வலுப்படுத்த முடியும். இதனால் பொதுமக்களும் பயன்பெறுவர். இந்தப் பணி மனநிறைவைத் தருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x