Published : 30 Jun 2021 03:13 AM
Last Updated : 30 Jun 2021 03:13 AM

கூடங்குளத்தில் ரூ.49,621 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது; 5, 6-வது அணு உலை கட்டும் பணி தொடக்கம்: 2027-ல் மின்உற்பத்தி தொடங்க திட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் 5 மற்றும் 6-வது அணுஉலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நேற்று தொடங்கின.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 மற்றும்6-வது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் பூமிபூஜையுடன் நேற்று தொடங்கின.ரூ.49,621 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்த அணுஉலைகளில் 2027-28ல் மின்உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் முதல் அணு உலையில் 2013-ம் ஆண்டு அக்.22-ம் தேதியும், 2-வது அணு உலையில் 2016-ம் ஆண்டு அக்.15-ம் தேதியும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதன்மூலம் தமிழகத்துக்கு 950 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.29-க்கு விற்கப்படுகிறது. தற்போது முதல் உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2-வது அணு உலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு 3 மற்றும் 4-வது அணுஉலைகள் அமைக்க கட்டுமானப் பணிகள் ரூ.39,849 கோடி மதிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த அணுஉலைகளில் மின் உற்பத்தி 2023-24-ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே 5 மற்றும் 6-வது அணுஉலைகள் ரூ.49,621 கோடியில் அமைக்க கட்டுமானப் பணிகள் பூமி பூஜையுடன் நேற்று தொடங்கின. பணிகளை இந்திய அணுசக்தித் துறைச் செயலரும், அணுசக்தி ஆணையத்தின் தலைவருமான கமலேஷ் நில்கந்த் வியாஸ், ரஷ்யாவின் ரோசாட்டம் நிறுவன இயக்குநர் ஜெனரல் டாக்டர் அலெக்சி லிகாசேவ், இந்தியஅணுசக்தி கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சதீஷ்குமார் சர்மா ஆகியோர் காணொலி மூலம் தொடங்கி வைத்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலைய வளாக இயக்குநர் ராஜீவ்மனோகர் காட்போலே, 1, 2-வது அணு உலைகளின் நிலைய இயக்குநர் சுரேஷ்பாபு, 3, 4-வது அணுஉலைகளின் திட்ட இயக்குநர் சின்னவீரன், 5, 6-வது அணு உலைகளின் திட்ட இயக்குநர் எம்.எஸ்.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

5 மற்றும் 6-வது அணுஉலைகளில் 2027-28ல் மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 6 அணு உலைகளிலும் மின்உற்பத்தி செய்யப்படும்போது, 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நாட்டுக்கு கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x