Published : 29 Jun 2021 09:08 AM
Last Updated : 29 Jun 2021 09:08 AM

கூடுதல் தளர்வுகளை மக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

தமிழக அரசு கரோனாவுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளில் தற்போது அறிவித்திருக்கும் கூடுதல் தளர்வுகளை மக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 29) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக அரசு கரோனாவுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைய வேண்டும். காரணம், கரோனா என்ற கொடிய நோயின் தாக்கத்தால் உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

அந்த வகையில், நம் நாடும் கரோனாவால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகமும் கடந்த ஒன்றரை ஆண்டாக கரோனா நோயின் தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது.

கரோனாவை கட்டுப்படுத்த வேண்டும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது, பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக, அரசு எடுக்கும் நடவடிக்கைகள் கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் தான் முதன்மையானதாக இருக்க வேண்டும்.

எனவே, கரோனாவுக்கு எதிராக மற்றும் மக்கள் நலனுக்காக கட்டுப்பாடுகள் விதித்து, தளர்வுகள், பிறகு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கும்போது, மக்கள் அந்த கட்டுப்பாடுகளையும், கூடுதல் தளர்வுகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பது தான் சரியானதாக இருக்கும்.

இச்சூழலில், தளர்வுகளை மக்கள் முறையாக கடைபிடிப்பதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும், தமிழக அரசு கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மக்களிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, விழிப்புணர்வை விரைவுபடுத்த வேண்டும், தடுப்பூசி தட்டுப்பாடும் இருக்கக்கூடாது, குறிப்பிட்ட காலத்திற்குள் ஊர் ஊராக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை முறையாக, முழுமையாக செய்து முடிக்க வேண்டும்.

பொதுமக்களும் கரோனாவினால் பாதிக்கப்படக்கூடாது, விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பது தான் தமாகா-வின் எண்ணம். எனவே, தமிழக மக்களே கசப்பான இந்த பாதிப்பான கரோனா காலத்தில் இருந்து நாமெல்லாம் தப்பித்து, நல்வாழ்க்கை வாழ அரசின் கூடுதல் தளர்வுகளை முறையாக பயன்படுத்துவோம், கட்டுப்படுவோம், ஒத்துழைப்போம், குடும்பத்தைக் காப்பாற்றுவோம், நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபடுவோம்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x