Last Updated : 28 Jun, 2021 03:12 AM

 

Published : 28 Jun 2021 03:12 AM
Last Updated : 28 Jun 2021 03:12 AM

‘ஜெய்ஹிந்த்’ குறித்த கொமதேக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு- பேரவைக் குறிப்பிலிருந்து நீக்க பாஜக முயற்சி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையுடன் பதிவிட்டு இருந்த வீடியோ.

கோவை

‘ஜெய்ஹிந்த்’ குறித்த கொமதேக எம்எல்ஏ ஈஸ்வரனின் பேச்சை பேரவைக் குறிப்பிலிருந்து நீக்க முயற்சி செய்வோம் என பாஜக அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ‘‘கடந்தாண்டு ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்’ என முடிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம்’ மட்டுமே இருந்தது. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லை. தமிழகம் தலைநிமிரத் தொடங்கி விட்டது’ எனத் தெரிவித்து இருந்தார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்கள் மூலமாக வேகமாக பரவிய அவரது கருத்துக்கு, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘சட்டப்பேரவையில் ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வின் இந்தப் பேச்சை கேட்டவுடன் நான் அதிர்ச்சியடைந்தேன். இதற்கு கண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், முதல் கூட்டம், அவையின் மரபு போன்ற காரணங்களால் உடனடியாக எதிர் குரல் கொடுக்க முடியவில்லை.

ஜெய்ஹிந்த் என்ற முழக்கமே தமிழகத்தில் இருந்து தான் சென்றது. இந்த வார்த்தையை உச்சரித்துக் கொண்டு, எத்தனையோ சுதந்திர போராட்ட தியாகிகள் தூக்கு மேடை ஏறியுள்ளனர். ராணுவ வீரர்கள் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரித்து தான், நம்மை பாதுகாக்கின்றனர்.

ஆனால், தமிழக சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் வார்த்தைக்கு இப்படியொரு அங்கீகாரம் அளிப்பதை, தமிழக முதல்வர், பேரவைத் தலைவர் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியினரும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது வேதனையாக உள்ளது. ஈஸ்வரன் எம்.எல்.ஏவின் மேற்கண்ட பேச்சை பாஜக மட்டுமின்றி, ராணுவ வீரர்கள், அரசியல் சார்பற்றவர்கள், தேசபக்தர்கள் ஓரணியில் நின்று எதிர்க்கின்றனர். அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க வழிவகை உள்ளதா என்பது குறித்தும் எங்களது சட்டமன்றக் குழு தலைவரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

அதிமுக நிலைப்பாடு

அதிமுக தலைமைக் கழக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் கூறும்போது, ‘‘ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை பொதுவாக, நாட்டில் அனைவரும் தேசப்பற்றோடு பயன்படுத்துகிற வார்த்தை. அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பொதுவாக பயன்படுத்துகிற வார்த்தை. விருப்பு, வெறுப்பு இல்லாத ஒரு வார்த்தை. ஜெய்ஹிந்த் என்பதும், வந்தேமாதரம் என்பதும் நாட்டுப்பற்று. தேசப்பற்றில் முழு நம்பிக்கை கொண்டது அதிமுக. இந்நிலைப்பாட்டில் இருந்து அதிமுக மாறாது. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இருந்தால் தவறில்லை’’ என்றார்.

காங்கிரஸ் ட்விட்டர் பதிவு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தங்களது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை பதிவிட்டு, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மூன்று முறை ஜெய்ஹிந்த் என்று கூறும் வீடியோவையும் பதிவிட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் கூறும்போது, ‘‘ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை பொதுவாக அனைவரும் பயன்படுத்துவர். நாட்டை மதிக்கக்கூடியவர்கள், நாடு செழிப்பாக வேண்டும் என்று நினைப்பவர்கள் பயன்படுத்தலாம். இது நம் தேசத்தின் மீதான பற்றுதலைக் காட்டக் கூடிய ஒரு வார்த்தை என்றே கருத முடியும். ஆக, இதை தமிழ்நாட்டில் கூறக் கூடாது என்று கிடையாது. ஜெய்ஹிந்த் என்பது தேசப்பற்றை உணர்த்துவது என்பதைத் தான் காட்டுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி, இந்த வார்த்தையைப் பற்றி சொல்லியதை, உண்மையிலேயே பாராட்டக்கூடியதாக நான் கருதவில்லை’’ என்றார்.

இந்து முன்னணி எதிர்ப்பு

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறும்போது, ‘‘ஜெய்ஹிந்த், தேசத்தின் அடிமை விலங்கைத் தகர்த்தெறிய முழங்கிய வார்த்தை. இந்த வார்த்தையை கேட்கும்பொழுது, நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாம் சிலிர்த்து எழுகின்றது. லட்சக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களை தட்டியெழுப்பிய சொல் குறித்து அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது. திமுகவை திருப்திப்படுத்த அவர் இவ்வாறு பேசியுள்ளார். அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரது வருகையை எதிர்த்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x