Last Updated : 27 Jun, 2021 07:14 PM

 

Published : 27 Jun 2021 07:14 PM
Last Updated : 27 Jun 2021 07:14 PM

கோவை மேட்டுப்பாளையத்தில் 'பாகுபலி' யானைக்கு ரேடியோ காலர் பொருத்த 4 கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழு அமைப்பு

கோவை

மேட்டுப்பாளையம் வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் சுற்றிவரும் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அதற்கு ரேடியோ காலர் பொருத்த தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் இன்று தொடங்கியுள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் காட்டுயானை ஒன்று சுற்றி வருகிறது. அதன் திடகாத்திரமான உடல்வாகு காரணமாக அப்பகுதி மக்கள் பாகுபலி என இந்த யானைக்கு பெயரிட்டு அழைத்து வருகிறார்கள். இந்த யானை இதுவரை மனிதர்கள் யாரையும் தாக்கவில்லை என்றாலும், தொடர்ந்து உணவுக்காக விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் யானையை அடர்வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த யானைகளின் உதவியுடன் மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை இன்று தொடங்கினர்.

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: மயக்க ஊசி செலுத்தி யானைக்கு ரேடியோ காலர் பொருத்த வேண்டும் என்பதால் கோவை வனக்கோட்ட கால்நடை மருத்துவர் சுகுமார், சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் அசோகன், முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ், ஓசூர் வன கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனச்சரகர்கள் தலைமையிலான குழுவினர் யானையை இரவு, பகலாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வனத்தை ஒட்டி மேடு, பள்ளங்கள் இல்லாத சமதள பரப்புக்கு யானை வந்தவுடன், மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகளின் உதவியுடன் அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும். குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்களுக்குள் யானை வருவதை தடுத்து வனப்பகுதிக்குள் எளிதில் விரட்ட முடியும்.

இன்றைய கண்காணிப்பு பணியின்போது சிறுமுகை ஓடந்துறை அடர் வனப்பகுதிக்குள் யானை சென்றுவிட்டது. எனவே, நாளை மீண்டும் கண்காணிப்பு பணி தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x