Published : 27 Jun 2021 03:14 AM
Last Updated : 27 Jun 2021 03:14 AM

மே 7-ம் தேதி வரை தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை; மின்தடைக்கு அதிமுக ஆட்சி மீது பழிபோடக்கூடாது: கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கருத்து

‘‘தமிழகத்தில் தற்போது அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு பரிகாரம் காண வேண்டுமே தவிர, முந்தைய அதிமுக அரசை குற்றஞ் சாட்டக் கூடாது என்று கடம்பூர் ராஜு எம்எல்ஏ கூறினார்.

வட அமெரிக்க கம்மவார் சங்கம் (கானா) சார்பில் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்கு உட்பட்டகயத்தாறு, வில்லிசேரி, கழுகுமலை, இளையரசனேந்தல், கீழஈரால் ஆகிய இடங்களில் உள்ளஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும்நிகழ்ச்சி கடம்பூர் மற்றும் வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்றது.

கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. மருத்துவ உபகரணங்களை மருத்துவ அலுவலர்களிடம் வழங்கினார். இதில், வட்டார மருத்துவ அலுவலர் உமாசெல்வி, மருத்துவர் கார்த்திக், வில்லிசேரி ஊராட்சித் தலைவர் வேலன், கோவில்பட்டி கம்மவார் சங்கத் தலைவர் வெங்கடேசன் சென்னகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பதவியேற்றுள்ள புதிய அரசு, இருக்கிற நிலையை கருத்தில் கொண்டு சரியாக ஆட்சி செய்ய வேண்டுமே தவிர, முந்தைய அரசை குற்றஞ் சாட்டக் கூடாது.

2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் சுமார் 13 மணி நேரம் வரை மின்தடை இருந்தது. அதன் பின்னர் சவாலான நேரத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக அரசு இரண்டே ஆண்டுகளில் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக்கியது.

அப்போது முதல் கடந்த மே 7-ம் தேதி திமுக அரசு பொறுப்பேற்கும் வரை தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை இருந்தது. தற்போது அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு பரிகாரம் காண வேண்டுமே தவிர, ஏதாவது சாக்கு போக்குசொல்லக்கூடாது. திமுகவுக்கும், மின்சாரத்துக்கும் ஏழாம் பொருத்தம் என மக்கள் பரவலாக பேசத்தொடங்கி விட்டனர். எதற்கெடுத்தாலும் முந்தைய அரசை குறை கூறக்கூடாது. தமிழகத்தில் 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் சரியாகநீண்ட நாட்கள் ஆகாது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்தினால் வெளிநாடு செல்ல முடியாது என்ற நிலை இருந்தால், நிச்சயமாக எதிர்க்கட்சி என்ற முறையில் அதிமுக மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x