Published : 25 Jun 2021 03:12 AM
Last Updated : 25 Jun 2021 03:12 AM

சென்னைக்கு கிருஷ்ணா நீர் கொண்டு வரப்பட்டதுபோல கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் உறுதி

திமுக ஆட்சியில் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது நடந்த விவாதம்:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என்று விமர்சித்தனர். திமுக ஆட்சிக்கு வந்து 49 நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது சாத்தியமல்ல. கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: தேர்தல் அறிக்கையில் அளித்த அனைத்தையும் நிறைவேற்றுமாறு நாங்கள் கோரவில்லை. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் போன்ற முக்கியமான கோரிக்கைகள் ஆளுநர் உரையில் விடுபட்டதைத்தான் சுட்டிக் காட்டினோம்.

அமைச்சர் துரைமுருகன்: திமுக ஆட்சிக்கு வந்து 49 நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் அனைத்தையும் செய்ய முடியாது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட, தமிழகத்துக்குள் ஓடும்நதிகளை இணைக்கும் திட்டங்களைக்கூட கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. இப்போது மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை இணைக்கும் திட்டத்தை ஏன் அறிவிக்கவில்லை என்றுஎதிர்க்கட்சித் தலைவர் கேட்கிறார். திமுக ஆட்சியில் சென்னைக்குகிருஷ்ணா நதி நீர் கொண்டுவரப்பட்டதுபோல கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நதி நீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. நில எடுப்பு தொடர்பாக பலர் நீதிமன்றத்துக்கு செல்வதால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருந்தது. திமுக அரசும் இந்தப் பிரச்சினையை சந்திக்கும்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்: திமுக ஆட்சியில் கிருஷ்ணா நதி நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது என்று அமைச்சர் கூறினார். ஆனால், எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்தான் இத்திட்டத்துக்கு வித்திடப்பட்டது.

அமைச்சர் துரைமுருகன்: கிருஷ்ணா நதி நீர் திட்டம், எம்ஜிஆர் ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதை மறுக்கவில்லை. ஆனால், 400 கி.மீ. தொலைவுக்கான அந்ததிட்டம் திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராகவும் நான் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்தபோதுதான் முடிக்கப்பட்டது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x