Published : 28 Dec 2015 09:54 AM
Last Updated : 28 Dec 2015 09:54 AM

கலாச்சாரம் என்ற பெயரில் உடை விஷயத்தில் தலையிடக் கூடாது

கோயில்களில் உடை கட்டுப்பாடு குறித்து மக்கள் கருத்து

*

ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகளை அணிந்து வருவோரை ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழக கோயில்களுக்குள் அனுமதிக்க கூடாது என்று இந்து சமய அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

குவைத்தில் வசிக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கமீ.சந்திரசேகரன் என்பவர், “அர்ச்சகர்கள் மேலாடை அணிந்து அர்ச்சனை செய்யலாமா? சுற்றுலா வுக்காக வரும் ஆங்கில பக்தர்கள் இந்த உத்தரவை பின்பற்ற முடியுமா? தமிழில் உத்தரவை எழுதி வைத்தால் அவர்களுக்கு எப்படி தெரியும்? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நமது வாசகர்கள் மற்றும் பொது மக்களிடம் கருத்துகளை கேட் டோம்.

எம்.கார்த்திகேயன் (பொது மேலாளர் என்எல்சி)

அண்மைக்காலமாக சில பெண்கள் அணியும் லெகிங்ஸ், அரை டிரவுசர் போன்ற ஆடைகள் மேற்கத்திய கலாச்சாரத்தை ஒட்டியது. இவற்றை அணிவது சரியல்ல. நம் கோயில்களின் புனிதத்தை நாம்தான் காப்பாற்றி யாக வேண்டும்.

முத்துவரதன் (ஓய்வுபெற்ற அரசு ஊழியர், கடலூர்)

கிராமக் கோயில்களில் பலர் கைலி மற்றும் அரை டிரவுசரை அணிந்து செல்வதை காண முடிகிறது. கோயில் என்பது புனிதமான இடம். அந்த இடத்துக்குச் செல்லும்போது மனத் தூய்மை எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு ஆடைத் தூய் மையும் அவசியம். அதை ஒழுங்குபடுத்துவதில் தவறில்லை.

கீதா இளங்கோவன் (ஆவணப்பட இயக்குநர், சென்னை)

கோயிலுக்குள் ஆண்கள் சட்டை போடக் கூடாது என்றும் பெண்கள் துப்பட்டா போட வேண் டும் என்றும் கூறுகிறார்கள்.

வழிபாட்டுத்தலங்களில் இருபாலரையும் ஏன் சமமாக நினைப்பதில்லை? ஆணின் பார்வையிலிருந்துதான் ஆடைக் கட்டுப்பாடுகள் நிர்ணயிக்கப்படு கின்றன. பெண்களுக்கு எந்த உடை வசதியானது என்று இதுவரை எந்த கோயில் நிர்வாகமும் கேள்வி கேட்டதில்லை.

டாக்டர் எஸ்.விஜய்கார்த்திக் (கும்பகோணம்)

மன நிம்மதிக்காகவே கோயில்களுக்குச் செல்கிறோம். அங்கும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என்பது தேவையற்ற ஒன்றாக உள்ளது. ஜீன்ஸ் என்பது ஆண்கள் அணியும் ஒரு முழுக்கால் பேன்ட் தான். அதற்கு தடை என்பது தேவையற்றது.

தேன்மொழி (தொழில் முனைவோர், சென்னை)

உடை என்பது அவரவரின் தனிப்பட்ட விஷயம். ஒருவர் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என்று அறநிலையத் துறையின் மூலம் அரசே சொல்வது ஏற்புடையதல்ல. கலாச்சாரம் என்று கூறி உடை உரிமையில் தலையிடுவது கூடாது.

நல்லபெருமாள் (தனியார் நிறுவன ஊழியர், குமரி மாவட்டம்)

ஆலயத்துக்கு வருவதும், பக்தியும் இப்போது வெகுவாக குறைந்து வருகிறது. இந்த சூழலில் ஆலயத்துக்குள் விதிக்கும் ஆடைக் கட்டுப்பாடு மிஞ்சி இருக்கும் ஆன்மிகத்தையும், அதன் உணர்வுகளையும் காலி செய்து விடும் அபாயம் உள்ளது.

ஐஸ்வர்யா சரவணக்குமார் (திருப்பூர்)

கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஆடை விஷயத்தில் கட்டுப்பாடு இருக் கும்போது, அதேபோன்று தமிழக கோயில்களிலும் கட்டுப்பாடு கொண்டுவருவதை வரவேற் கிறோம். பொதுஇடங்களில் கலாச் சார உடை அணிந்து செல்வதன் மூலம், நம் பண்பாடும் மேம்படும்.

பி. ரவீந்தர் ( கும்பகோணம்)

முதலில் தமிழகத்திலிருந்து மேலை நாடுகளுக்கு சென்ற ஒரு சமூகத்தினர்தான் கோயில்களுக்கு வரும்போது பர்முடாஸ், டீ சர்ட், ஸ்லீவ்லெஸ் போன்ற உடைகளை அணியத் தொடங்கினர். அதைப் பார்த்துதான் தமிழகத்தில் உள்ள வர்களும் இதுபோன்ற உடைகளை அணிந்து வர துவங்கினர். முதலில் ஆகமம், வேதம் போதிப்பவர்களின் குடும்பத்தினர்களும் பாரம்பரிய உடையை உடுத்தி வர வேண்டும்.

பிரான்சு நாட்டு சுற்றுலா பயணி ஆலிவர் டோம்மர்கெஸ்

அனைத்து கோயில்களுக்கும் பொதுவான ஆடை கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால் யாருக்கும் குழப்பம் ஏற்படாது. இந்த புதிய ஆடை கட்டுப் பாட்டு திட்டத்தை வரவேற்கிறேன்.

எஸ்.பொற்கொடி (திண்டுக்கல்)

இந்த உத்தரவு நமது பழமையான கலாச்சாரம், பண்பாட்டை அடுத்த தலை முறைக்கு எடுத்துச் செல்லும். இந்த உத்தரவு முறையாக அமல் படுத்தப்படுகிறதா என்பதை தீவிர மாக கண்காணிக்க வேண்டும்.

நீ.நிமிலன் (மாற்றுத்திறனாளி, சிவகங்கை)

மாற்றம் மனதிலிருந்து வர வேண்டும். ஆடைகளை மாற்று வதால் மாற்றம் வருமா என்பது சந்தேகம். இருப்பினும் உயர் நீதிமன்ற உத்தரவு வரவேற்புக்குரிய ஒன்று தான்.

டி.கார்த்திக் (கவரிங் நகைக்கடை உரிமையாளர், சேலம்)

அலுவலகம் செல்பவர்கள் வழியில் கோயிலுக்கு செல்வதென் றால் உடை மாற்றிக் கொண்டுதான் கோயிலுக்குள் நுழைய வேண் டும் என்பது இப்போதுள்ள காலகட் டத்தில் சரிவராது. கோயில்களுக்கு சுற்றுலாப் பயணிகளாக வருபவர் களுக்கு வேண்டுமானால் இந்த கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

எம்.சரஸ்வதி (குடும்பத் தலைவி, சேலம்)

பொதுவாக பெண்கள் எப்போதும் கோயிலுக்கு மட்டு மின்றி பொது இடங்களுக்குச் செல்லும்போது கூட அடுத்தவர் கண்களை உறுத்தாத வகையில் ஆடை அணிய வேண்டும். மாடர்ன் உடை அணிந்தாலும் அது பிறர் பார்வைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருந்தால் போதும். அதற்காக, கோயிலுக்கு வருவ தற்கு குறிப்பிட்ட உடையைத்தான் அணிந்து வர வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.

தனமணி வெங்கடபதி (தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், பீடம்பள்ளி)

நாட்டில் ஆடைக் கலாச்சாரம் மிக மோசமான நிலையில் இருப் பதையும், அதன்மூலம் குற்றங்கள் பெருகி வருவதையும் நீதிமன்ற உத்தரவு வெளிப்படுத்துகிறது. எனவே, ஆடைக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை வழிபாட்டுத் தலங்களில் இருந்து பொது இடங்களுக்குமாக விரிவுபடுத்த வேண்டும்.

அ.மா. பாரதிபிரியா (மருத்துவ கல்லூரி மாணவி, தஞ்சை)

கோயில்கள் பக்திக்குரியதா கவும், பாரம்பரிய இடங்களாகவும் இருப்பதால், அதற்கு ஏற்ற உடை களை மட்டுமே அணிந்து செல்ல வேண்டும். நமது நாட்டின் தனித் துவம் கோயில்கள்தான். இவற் றையும் உலகமயம் என்ற பெயரில் நவீனமாக மாற்றி விட்டோம் என்றால் நமது அடையாளத்தை இழந்து விடுவோம்.

இந்த சட்டத்தில் இருந்து வெளிநாட்டினருக்கு விலக்கு அளிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x