Published : 26 Jun 2014 10:00 AM
Last Updated : 26 Jun 2014 10:00 AM

கட்சியில் அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னை அவமானப்படுத்துவது நியாயமா? - திமுவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. குமுறல்

'என் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யார் சுமத்தினார்கள், கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக எந்தப் பகுதியில் நான் ஓட்டு கேட்டேன் என்ற விவரம் இல்லை. சுயமரியாதை உணர்வும், தன்மான உணர்வும் திமுகவின் உயிர் மூச்சு என்றால், அது தலைமைக்கு மட்டும்தானா, என்னைப் போன்ற தொண்டனுக்கு இருக்கக் கூடாதா’ என திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் கேள்வி எழுப்பி யுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் சமயத் தில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த சில தினங்களுக்கு முன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் உள்பட கட்சியின் மாவட்டம் மற்றும் ஒன்றியச் செய லாளர் மட்டத்திலான நிர்வாகிகள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து மாநிலங்களவை உறுப் பினர் கே.பி. ராமலிங்கம் புதன் கிழமை நிருபர்களிடம் கூறியது:

என்னை கட்சியில் இருந்து நீக்கப்பட்டது ஊடங்கங்கள் மூலம் தெரியவந்தது. அதன் காரணமாக தலைமைக்கு அனுப்பும் விளக்கத்தை ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்துகிறேன்.

கடந்த 1990-ம் ஆண்டு இப்போதுபோல் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோற்ற நிலையில் கட்சியில் இணைந்தேன்.

அப்போது திருச்சியில் நடைபெற்ற 6-வது மாநில மாநாட்டில் பேசுவதற்கு மாநாட்டின் அழைப்பிதழில் முக்கிய இடத்தில் பெயர் சேர்த்தீர்கள் (திமுக தலைவர் கருணாநிதி). இந்த 24 ஆண்டுகளில் என்னை உங்கள் பிள்ளையாகக் கருதி 3 முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும், ஒரு முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் அனுமதித் துள்ளீர்கள்.

அதுபோல் கடந்த 2010-ம் ஆண்டு முதல் மக்களவையில் பணிபுரிய வாய்ப்பளித்தீர்கள். அதன்படி கடந்த 24 ஆண்டுகளில் கட்சிப் பணிகளில் தங்களது விருப்பப்படி மிகச் சிறப்பாக ஈடுபட்டு வந்துள்ளேன். இச் சூழலில் உங்களது பிள்ளை களில் ஒருவருக்கு என்னை பிடிக்க வில்லை என்பதற்காக கட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னை அவமானப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?

கடந்த 10 ஆண்டுகளாக எனக்கு கட்சியில் அதிகாரம் படைத்த அந்த பிள்ளையால் ஏற்பட்ட அவமானங்களை நீங்கள் ஏன் சரி செய்யவில்லை?

ஏற்காடு இடைத்தேர்தலுக்கு ஏன் தேர்தல் பணிக்குழுவில் என் பெயர் சேர்க்கவில்லை என்று அந்த அரசியல் அதிகாரம் படைத்த பிள்ளையிடம் ஏன் கேட்கவில்லை? நாடாளுமன்ற தேர்தலில் நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில் கிரிமினல் குற்றவாளிகளுக்குக்கூட இடம் அளிக்கப்பட்ட நிலையில் எனக்கு ஏன் இடம் அளிக்கவில்லை?

கட்சியில் சேர்ந்த காலத்தில் திருச்சியில் நடைபெற்ற 6-வது மாநில மாநாட்டில் என்னை பேச அனுமதித்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் என்னை பேச அனுமதிக்காதது ஏன்? இதுபற்றி ஏன் தங்கள் பிள்ளையிடம் கேட்கவில்லை.

இச்சூழலில் தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் தவறு செய்தவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டு என்ன தவறு செய்தாய் என்றுகூட என்னை கேட்காமல் நான் வகித்த பொறுப்புகளை நீக்கியும், கழகத்தைவிட்டு தற்காலிகமாக நீக்கியும் அறிவிப்பு வெளியிட்டு ஒரு வார காலத்துக்குள் பதிலும் கேட்கப்பட்டுள்ளது.

என் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யார் சுமத்தினார்கள், கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக எந்தப் பகுதியில் நான் ஓட்டு கேட்டேன் என்ற விவரம் இல்லாமல் கட்சி சட்டதிட்ட விதி 37 பிரிவு 4-ன்படி ஒழுங்கு நடவடிக்கை என்றால், அதுவும் ஊடகம், பத்திரிகை மூலம் என்றால், இதை நான் அவமானமாகக் கருதுகிறேன். சுயமரியாதை உணர்வும், தன்மான உணர்வும் திமுகவின் உயிர் மூச்சு என்றால், அது தலைமைக்கு மட்டும்தானா? என்னை போன்ற தொண்டனுக்கு இருக்ககூடாதா?’ என்றார்.

மாநிலங்களவை உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் கட்சித் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x