Published : 22 Jun 2021 03:13 AM
Last Updated : 22 Jun 2021 03:13 AM

பேய் பிடித்துள்ளதாக அச்சமடைந்து தாக்கியதில் கண்ணமங்கலத்தில் சிறுவன் உயிரிழப்பு: தாய் உட்பட 3 பெண்கள் கைது

கண்ணமங்கலத்தில் 7 வயது மகனுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி தாக்கி கொலை செய்த தாய் உட்பட 3 பெண்களை காவல்துறை யினர் நேற்று கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் வசித்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி திலகவதி (30). இவர்களது மகன் சபரி(7). கார்த்திகேயன் மறைவுக்குப் பிறகு, வேலூர் அடுத்த அரியூரில் வசிக்கும் சகோதரிகள் கவிதா(28), பாக்கியலட்சுமி(27) ஆகியோருடன் திலகவதி மகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சபரிக்கு வலிப்பு நோய் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை, தாய் உள்ளிட்ட 3 பேரும் பேய் பிடித்துள்ளதாக நினைத்து, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வசிக்கும் மாந்திரீக செயலில் ஈடுபடும் நபரிடம் காண்பித்தால் குணமாகிவிடும் என்ற மூட நம்பிக்கையில் நேற்று முன் தினம் இரவு புறப்பட்டுள்ளனர். சபரியை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு வந்தவாசி நோக்கி திலகவதி உள்ளிட்ட 3 பெண்களும் பயணித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே மாவட்ட எல்லை பகுதியில் உள்ள சோதனைச் சாவடிக்கு வந்தபோது, ஆட்டோவை தொடர்ந்து இயக்க ஓட்டுநர் மறுத்துவிட்டார். இதனால். சபரி மற்றும் 3 பெண்களும் கீழே இறக்கிவிடப் பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் சிறிது தூரம் நடந்து சென்று கண்ணமங்கலம் பேருந்து நிலையத்தில் தஞ்ச மடைந்துள்ளனர்.

அதிகாலை 3 மணி அளவில் சபரிக்கு திடீரென மீண்டும் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தாய் உள்ளிட்ட 3 பெண்களும், சபரிக்கு பேய் பிடித்து விட்டது என அச்சமடைந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், சபரியின் கழுத்து, நெஞ்சு மற்றும் வாய் உள்ளிட்ட இடங்களில் கை களை கொண்டு அமுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அலறிய சபரியின் சத்தம் கேட்டு, பேருந்து நிலையம் அருகே இருந்தவர்கள், 3 பெண்களின் செயலை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மூவரும், தடுக்க வந்தவர்களை விரட்டினர். இதற்கிடையில் துடிதுடித்து சபரி உயிரிழந்தான்.

இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் காவல் துறை யினர் சம்பவ இடத்துக்கு சென்று, சபரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சபரியை கொலை செய்ததாக தாய் திலகவதி, அவரது தங்கைகள் கவிதா, பாக்கியலட்சுமி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கொலை நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு 3 பெண்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் விசாரணை நடத் தினார். இதற்கிடையில், பிரேதப் பரிசோதனை முடிந்து சபரியின் பெரியப்பா நாகராஜியிடம், சிறுவனின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x