Published : 21 Jun 2021 03:14 AM
Last Updated : 21 Jun 2021 03:14 AM

தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரை முதல்வர் நேரில் சந்திக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

திருவாரூர்/சென்னை

காவிரியில் தமிழகத்தின் உரிமைகளைப் பெற காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்திக்க வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்திஉள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரம் கொண்டது. இந்த ஆணையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மற்ற ஆணையங்களோடு சேர்த்து மத்திய அரசின் அலுவலகப் பட்டியலில் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நீர் நிர்வாகம் குறித்த ஆலோசனைகளை வழங்க காவிரி கண்காணிப்பு குழு என்ற ஒரு துணை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழு அலுவலகம் பெங்களூர் நகரத்தில் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரையிலும் அலுவலகம் ஏற்படுத்தப்படவில்லை. தற்போதுதான் நிரந்தரத் தலைவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற பலர், ஆணைய தலைவரை சந்தித்து அணை கட்டுவதற்கு முன் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்திலிருந்து இதுவரையிலும் முதல்வரோ, அமைச்சர்களோ ஆணையரை சந்தித்து பேசாதது ஆணையத்தை சிறுமைப்படுத்தும் விதமாக அமைந்து விடுமோ என்கிற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மாதந்தோறும் தரவேண்டிய நீரை திறக்க வலியுறுத்தி ஆணைய தலைவருக்கு எழுதாமல் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருப்பது முரண்பாடாக உள்ளது.

ஆணைய செயல்பாட்டில் மத்திய அரசு தலையிடவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. எனவே, ஜல்சக்தி துறைக்கு கடிதம் எழுதுவது பொருத்தமற்றது. எனவே, காவிரி ஆணையத் தலைவரை முதல்வரோ, நீர்வளத் துறை அமைச்சரோ நேரில் சந்தித்து உடனடியாக ஆணையை கூட்டத்தைக் கூட்டி தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

மறுக்கும் பட்சத்தில் ஆணைய தலைவர் மீது உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர வேண்டும். தேவையானால் இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகள், விவசாயிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும். மேகேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். காமராஜர் ஆட்சியில் திட்டமிடப்பட்ட தமிழகப் பகுதியில் ராசி மணலில் அணை கட்டவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே, மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்காமல், மவுனம் காக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கண்டித்து, விவசாயிகள் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் இன்று (ஜூன் 21) கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணையவழியில் நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்டச் செயலாளர் மேலூர் அருண் தலைமை வகித்தார். 22 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய அமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக முதல்வரின் நடவடிக்கையை கண்டிக்கிறோம். இதுகுறித்து விவாதிப்பதற்காக, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள், விவசாயிகள் கொண்ட கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும். மேலும், மேகேதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தாமல், மவுனம் காக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் விவசாயிகள் இன்று (ஜூன் 21) கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் நடத்துகின்றர். இதில், அரசியல் கட்சிகள், விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x