மின்சார கட்டணத்தை அபராதம் இல்லாமல் செலுத்தும் வகையில் அவகாசம் அளிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

மக்கள் மின்சார கட்டணத்தை அபராதம் இல்லாமல் செலுத்தும் வகையில், மின்சார வாரியம் மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 19) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால், சாதாரண மக்கள் முதல் பெரும் செல்வந்தர்கள் வரை தொழில் இல்லாமல் பொருளாதார ரீதியாக இழப்பை சந்தித்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அளித்தாலும் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இருந்த பொழுதும், மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே அல்லாடும் நிலையில் மின்சார வாரியம், மின்சார கட்டணத்தை குறித்த காலத்திற்குள் கட்டவில்லை என்றால், அதற்கு அபாராத தொகை வசூலிப்பது வெந்த புண்ணில் வேலைப் பாச்சுவதை போல் உள்ளது.

மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் இந்த நேரத்தில், மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு மேலும் அவகாசமும், கட்டத் தவறினால் மின் இணைப்பை துண்டிப்பதோ அல்லது அபராத தொகை வசூலிப்பதோ கூடாது. கண்ணெதிரே மக்கள் படும் துன்பத்தை பார்த்த பிறகும் அரசு இதுபோல் செயல்படுவது மிகுந்த வருத்ததை அளிக்கிறது.

ஆகவே, தமிழக மின்சார வாரியம் மின்சார கட்டணத்தை அபராதம் இல்லாமல் திரும்ப செலுத்த மேலும் அவகாசமும் அளிக்க வேண்டும் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in