Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை; வனப் பகுதிகளில் பசுமை திரும்பியதால் முதுமலை திரும்பிய வன விலங்குகள்: போக்குவரத்து இல்லாததால் சாலையில் திரியும் யானைகள்

நீலகிரி மாவட்டம் முதுமலையில் சீகூர் வனப்பகுதியில் இடையூறு ஏதுமில்லாமல் ஓய்வெடுக்கும் மான்கள்.

முதுமலை

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், வனப்பகுதியில் பசுமை திரும்பியுள்ளது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிலவிய கடும் பனிப்பொழிவால், வனங்களில் பசுமை குறைந்து வறட்சி நிலவியது. பின்னர், வனப்பகுதியில் கோடை வெப்பமும் அதிகமாக இருந்ததால், தண்ணீர் மற்றும் உணவு தேடி, வனவிலங்குகள் கர்நாடக, கேரளவனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தன.

இந்நிலையில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முதுமலை, சீகூர் மற்றும் சிங்காரா வனச் சரகங்களில் பசுமை திரும்பியதோடு, நீர்நிலைகள் ஓரளவுக்கு நிரம்பியுள்ளன. சீகூர்வனத்தில் உற்பத்தியாகும் சில்லல்லஹா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

விலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

வனப் பகுதிகள் பசுமையாகக் காட்சியளிப்பதால், கோடை காலத்தில் இடம்பெயர்ந்த வன விலங்குகள், மீண்டும் தமிழக வனப்பகுதிகளுக்கு திரும்பி வருகின்றன. இதன் காரணமாக சீகூர் வனப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் மான்கள், காட்டெருமைகள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கரோனா ஊரடங்கால், முதுமலைக்குச் செல்லும் சாலைகளில் அதிக போக்குவரத்து இல்லை. இடையூறு இல்லாததால் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தைவிட்டு வெளியேறி, சாலைகளிலேயே சுற்றித் திரிகின்றன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளை, வனத் துறையினர் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x