Published : 18 Jun 2021 03:17 AM
Last Updated : 18 Jun 2021 03:17 AM

பாலருவி ரயிலுக்கு செங்கோட்டை, பாவூர்சத்திரம், கடையம், நிறுத்தங்கள் நீக்கம்: தமிழக பகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

திருநெல்வேலி

சுமார் 118 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருநெல்வேலி - செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் திருநெல்வேலி நகரம், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாச முத்திரம், கீழஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.

திருநெல்வேலியில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம் தென்காசி, கொல்லம் வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 06791/06792 ) கரோனா ஊரடங்குக்கு முன் இயக்கப்பட்டு வந்தது. ஊரடங்கு காலத்தில் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த ரயில் நேற்று முதல் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரயிலுக்கு செங்கோட்டைக்கு இரு மார்க்கத்திலும், பாவூர்சத்திரம் மற்றும் கடையத் துக்கு ஒரு மார்க்கத்திலும் ரயில் நிறுத்தங்கள் நீக்கப்பட்டுள்ளன.

தென் தமிழ்நாட்டில் பிரதான தினசரி காய்கறி சந்தை, மிகப்பெரிய பூ மார்க்கெட் மற்றும் மர வியாபாரம், ஓடு வியாபாரம் போன்ற தொழில்களில் பாவூர்சத்திரம் சிறந்து விளங்கி வருகிறது. மேலும் 30- க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் மிக முக்கிய நகரமாக பாவூர்சத்திரம் விளங்கிவருகிறது.

தமிழகத்தில் இருந்து வணிக ரீதியாக கடையம், பாவூர்சத்திரம் மற்றும் செங்கோட்டை சுற்று வட்டார பொதுமக்களும், வியாபாரிகளும் கேரளாவில் உள்ள புனலூர், கொட்டாரக்கரை, கொல்லம், கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் செல்ல இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வந்தனர். தற்போதைய சூழ்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து கேரளா செல்வதற்கு பேருந்து சேவைகளும் இல்லை. எனவே, இந்த சூழ்நிலையில் பாலருவி விரைவு ரயிலுக்கு செங்கோட்டை, பாவூர்சத்திரம் மற்றும் கடையம் ஆகிய நிறுத்தங்கள் வேண்டுமென்று பல்வேறு அரசியல் கட்சிகள், ரயில் பயணிகள் சங்கங்கள், பொதுமக்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் தொடர்ந்து ரயில்வே துறையை வலியுறுத்தி வருகின்றனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

இந்நிலையில் சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த ரயிலுக்கான நிறுத்தங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள மதுரை ரயில்வே கோட்ட மூத்த வர்த்தக மேலாளர் பிரசன்னா, “ வர்த்தக ரீதியாக லாபம் தரும் நிலையங்களாக கணக்கிடப்பட்டு கடையம், பாவூர்சத்திரம் மற்றும் செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு மீண்டும் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று, தெற்கு ரயில்வே மூத்த வர்த்தக மேலாளருக்கு கடந்த 2021 ஜனவரி 4-ம் தேதி கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும் என்றால், இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான நேரத்தில், ஏறுவோர் இறங்குவோர் சேர்த்து குறைந்தபட்சம் 18 பயணிகள் பயன்படுத்த வேண்டும். மேற்கண்ட ரயில் நிறுத்தங்கள் குறித்து ரயில்வே தலைமையகம் தான் முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அட்டவணை மாற்றப்படுமா?

திருநெல்வேலி பிட் லைனில் தினசரி பராமரிப்பு பணிகளை முடித்து அனைவரும் தூங்கிய பின், நடுஇரவு 11.20 மணிக்கு புறப்பட்டு கேரள எல்லைக்குள் அதிகாலை 4 மணி அளவில் சென்று முழுக்க முழுக்க கேரளா பயணிகள் பயன்பெறும் வகையில், இந்த ரயிலுக்கான அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது என்று, பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், “குறிப்பிட்ட ரயில் நிலையங்களை நடு இரவில் கடப்பதால் தான் நிறுத்தங்கள் கொடுக்கப்படவில்லை” என்று, அதிகாரிகள் காரணம் கூறுகின்றனர்.

திருநெல்வேலி தென்காசி வழித்தடத் தில் இயங்கும் ஒரே விரைவு ரயில் இது. வெறும் பராமரிப்பு பணிகளுக்காகவே திருநெல்வேலி பணிமனைக்கு தள்ளிவிடப்பட்டு, யாருக்குமே சம்பந்தம் இல்லாத நேரத்தில் பயணத்தை தொடங்கி தமிழக பகுதிகளை முற்றிலும் புறக்கணித்து கேரளா செல்கிறது. இரவு 9 மணிக்குள் திருநெல்வேலியில் புறப்படும் வகையில் அட்டவணை மாற்றப்பட்டு, கடையம், பாவூர்சத்திரம், செங்கோட்டை நிறுத்தங் கள் வழங்கப்பட்டு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x