Published : 16 Dec 2015 08:43 AM
Last Updated : 16 Dec 2015 08:43 AM

தாசில்தார் தற்கொலை முயற்சியால் மாவட்ட ஆட்சியரை மாற்ற கோரும் வருவாய் ஊழியர்கள்: தலைமைச் செயலரிடம் முறையிட முடிவு

தாசில்தார் தற்கொலைக்கு முயன்ற தால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வருவாய்த்துறை அலுவலர்கள் முற்றுகையிட்டனர். மாவட்ட ஆட்சியரை மாற்றக்கோரி தலைமைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையரிடம் முறையிட வும் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது வெள்ள நிவாரண கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளில் சென்னையைச் சேர்ந்த வருவாய் அலுவலர்கள் 300 பேர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கணக்கெடுப்பு பணியாளர்கள் ஆங்காங்கே மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, தினசரி காலை வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டு கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அண்ணா பல்கலை. வளாகத் தில் தங்கவைக்கப்பட்ட வருவாய் அலுவலர்களுக்கு தண்டையார்ப் பேட்டை தாசில்தார் சத்திய பிரசாத்(52) ஒருங்கிணைப் பாளராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை சத்திய பிரசாத் அண்ணா பல்கலை.யில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, அங்கு சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி சென்றுள்ளார். வருவாய் அலுவலர் களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்குவது தொடர்பாக எழுந்த விவாதத்தில், சத்திய பிரசாத்தை ஊழியர்கள் மத்தியில் ஆட்சியர் திட்டியதாக கூறப்படுகிறது.

அலுவலர்கள் சமாதானப்படுத் திய நிலையில், ஆட்சியர் சுந்தரவல்லி சென்ற பின், சத்திய பிரசாத் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஊழியர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித் தனர்.

இதையடுத்து, தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர்.

இது தொடர்பாக வருவாய்த் துறை ஊழியர்கள் கூறியதாவது:

வெளி மாவட்ட பணியாளர் களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வாங்கித் தரவில்லை என்பதற்காக ஆட்சியர் திட்டியுள்ளார். கடுமை யாக திட்டியதால் மனமுடைந்த சத்திய பிரசாத் தற்கொலைக்கு முயன்றார். அவர் கழிப்பறையில் இருந்து வெகுநேரம் வராததால் சந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்ததால்தான் சத்திய பிரசாத்தை காப்பாற்ற முடிந்தது. அவர் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால், வீட்டில் தூக்க மருந்து கொடுத்து தூங்க வைக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் இதற்கு முன் ஒருமுறை அலுவலர்களை கடுமையாக திட்டியபோது நாங்கள் அவரிடம் எடுத்து கூறியதால், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

தற்போது மீண்டும் இது போல் நடந்து கொண்டதால் அவரை மாற்ற வேண்டும் என முற்றுகை போராட்டம் நடத்தினோம். அவர் பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். நாங்கள் செல்லாததால் அவரே நேரில் வந்து அழைத்து பேசினார். மீண்டும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதுடன், இனிமேல் இது போல் நடக்காது என உறுதியளித்ததால் போராட்டத்தை தொடராமல், கலைந்து சென்றோம். தொடர்ந்து, நாளை (இன்று) மாவட்ட ஆட்சியரை மாற்ற கோரி தலைமைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய்த்துறை செயலரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x