Published : 16 Jun 2021 05:50 PM
Last Updated : 16 Jun 2021 05:50 PM

சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை முழுமையாக ரத்து செய்க: குழந்தைகள் நலச் சங்கம் கோரிக்கை

செங்கல்பட்டு

சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளி அங்கீகாரத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று காஞ்சிபுரம்/ செங்கல்பட்டு மாவட்டக் குழந்தைகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் என்னும் பள்ளியை சிவசங்கர் பாபா என்பவர் நடத்தி வருகிறார். அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அவர் அத்துமீறி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்குத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பாக சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இருவர் மீது பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்பத் தகவல் சட்டம் உட்பட 9 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டிருந்ததை அடுத்து, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக, சிபிசிஐடி தனிப்படை டேராடூன் விரைந்தது. கைதில் இருந்து தப்பிக்க அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். அவர் டெல்லியில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில், டெல்லி போலீஸார் அவரைக் கைது செய்தனர். அங்கேயே அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தமிழகம் அழைத்து வரப்பட உள்ளார்.

இந்நிலையில், சுஷில்ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்டக் குழந்தைகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு காஞ்சிபுரம்/ செங்கல்பட்டு மாவட்டக் குழந்தைகள் நலச் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், ''சுஷில்ஹரி பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இச்சம்பவத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகள் அந்தப் பள்ளியில் படிப்பைத் தொடர விருப்பம் இல்லாமல் மாற்றுச் சான்றிதழைப் பெற்று வேறு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி இப்பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கக் கல்வித்துறை உரிய ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும். குழந்தைகளின் நலனுக்கு எதிராக சிவசங்கர் பாபா செயல்பட்டு, பல்வேறு மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும், பள்ளி நிர்வாகம் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் பள்ளிக் கல்வித்துறை உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழக அரசை மாவட்டக் குழந்தைகள் நலச் சங்கத்தின் மூலம் கேட்டுக் கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x