Last Updated : 21 Dec, 2015 08:06 AM

 

Published : 21 Dec 2015 08:06 AM
Last Updated : 21 Dec 2015 08:06 AM

பேரிடரிலும் தொடர்ந்து பணி செய்த பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள்: பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

வெள்ளத்தில் மூழ்கிய வீடு; தண்ணீரில் தத்தளித்த குடும்பம்

*

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத் தால் வீடு மூழ்கி குடும்பம் தத்தளித்த நேரத்திலும் கூட பணிக்குச் சென்றிருந்த பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் சிலர் மறுவாழ்வுக்காக பணி நிரந்தரம் கோரியுள்ளனர்.

சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது, தனியார் தொலைத் தொடர்பு சேவைகள் முடங்கின. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவன சேவை மட்டும் தங்கு தடையின்றி கிடைத்தது. அப்படி சேவை கிடைக்க காரணமாகியிருந்த ஆயிரக்கணக்கான பிஎஸ்என்எல் ஊழியர்களில் மூவர், தங்களது வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும் பணியாற்றினர். அடையாறு மற்றும் கூவம் ஆற்று தண்ணீர் சேருகிற பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளை இழந்த அந்த ஊழியர்கள் தங்கள் நிலை விளக்கினர்.

வி.ராமதாஸ் என்னும் ஒப்பந்த ஊழியர் கூறும்போது, “எனது வீடு வெட்டுவாங்கேனியில் உள்ளது. கடந்த 30-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை நீலாங்கரை பிஎஸ்என்எல் இணைப்பகத்தில் இரவு பகல் பாராமல் பணியாற்றினேன். திரும்பி வீடு சென்றபோது, கிழக்கு கடற்கரை சாலை அருகேயுள்ள கோவிந்தன் நகர், எம்ஜிஆர் நகர் அனைத்தும் நீரில் மூழ்கியிருந்தன. மனைவி, 2 மகன்களும் அருகிலுள்ள பள்ளியில் தஞ்சம் புகுந்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் எனது மூத்த மகனின் சான்றிதழ்கள் பல நீரில் கரைந்துவிட்டன. எனது இளைய மகனுக்கு லேசான மனநல கோளாறு, அவன் வளர்த்த பூனை வெள்ளத்தில் மூழ்கி இறந்துவிட்டது” என்றார்.

ஊழியர் எம்.கர்ணன் பேசும் போது, “மழையின் போது, பல இடங்களில் பிஎஸ்என்எல் லேண்ட் லைன் கேபிள்களில் பிரச்சினை ஏற்பட்டதால், டிசம்பர் 1-ம் தேதி காலை 9 மணிக்கே பணிக்கு புறப்பட்டிருந்தேன். பகலில் வெளிப்புற கோளாறுகளை சரி செய்துவிட்டு, இரவில் இணைப்பக பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, முட்டி அளவு தண்ணீர் வீட்டுக்குள் புகுந்துவிட்டது என்று மனைவி போனில் சொன்னார். அடுத்த சில மணி நேரங்களில் இடுப்பளவு தண்ணீர் புகுந்துவிட்டதால், விட்டை விட்டு வெளியேறியதாகக் அவர் கூறினார். இணைப்பகத்தில் ஜெனரேட்டரை பராமரிக்கும் பணியில் இருந்தேன்” என்றார்.

இதேபோல், எம். குமார் என்பவர் கூறுகையில், “பாலவாக்கத்தில் உள்ள எனது வீடு முழுமையாக மூழ்கிப்போனது, திருவான்மியூர் இணைப்பகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். வெள்ளத்தில் மூழ்கியது என்று நான் நிவாரண உதவி எதையும் கேட்கவில்லை. ஏனென்றால், பணி செய்வது என் கடமை. என்றாலும், இழப்பை ஈடுசெய்ய பணி நிரந்தரம் வழங்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x