Published : 11 Dec 2015 05:03 PM
Last Updated : 11 Dec 2015 05:03 PM

நிவாரண நிதியுதவி வழங்க லஞ்சம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

வெள்ளம் பாதித்த குடும்பங்களுக்கு அரசின் நிதி கிடைக்க வேண்டுமானால், மேலிடத்தில் உள்ளவர்களுக்கு லஞ்சம் தர வேண்டும் என்று கூறி ஆளுங்கட்சியினர் ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.500 முதல் ரூ.1000 வரை லஞ்சம் வசூலிக்கின்றனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ''மழை மற்றும் வெள்ளத்தால் பேரழிவை சந்தித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டிருக்கிறார். தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் போதாது என்று பொதுமக்கள் கூறியுள்ள நிலையில், இந்த உதவி மக்களுக்கு கிடைக்காமல் முடக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.

நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் கணக்கெடுக்கும் பணிகள் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தொடங்கியுள்ளன.

வெள்ளம் பாதித்த குடும்பங்களை வீடு வீடாகச் சென்றுதான் கணக்கெடுக்க வேண்டும். ஆனால், கணக்கெடுப்புக் குழுவினர் அவ்வாறு செய்யாமல் ஒவ்வொரு பகுதியிலும் ஏதாவது ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, அந்தப் பகுதியில் உள்ளவர்களை அழைத்து விசாரித்து, வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைப் பெறுகின்றனர். இதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.

இதை உறுதி செய்வது போல ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஆளுங்கட்சி நிர்வாகிகள் கணக்கெடுப்பு நடைபெறும் இடத்தில் அமர்ந்து கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களையும் நிவாரண நிதி பெற தகுதியானவர்கள் பட்டியலில் சேர்க்கின்றனர். அதுமட்டுமின்றி, உண்மையாகவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் அரசின் நிதி கிடைக்க வேண்டுமானால், மேலிடத்தில் உள்ளவர்களுக்கு லஞ்சம் தர வேண்டும் என்று கூறி ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.500 முதல் ரூ.1000 வரை லஞ்சம் வசூலிக்கின்றனர்.

சென்னையில் மழை மற்றும் வெள்ளத்தால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தரைத்தளத்தில் உள்ள வீடுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்க முடியும் என்றும், முதல் தளம் மற்றும் அதற்கு மேல் உள்ள தளங்களில் வசிப்பவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படாது என்றும் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்.

தரைத்தளத்திற்கு மேல் வசிப்பவர்களுக்கு நிவாரணநிதி கேட்டு வரும்போது அவர்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்ய மறுத்து திருப்பி அனுப்புகின்றனர். வரலாறு காணாத மழையால் சென்னையில் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பல இடங்களில் 12 அடி உயரத்திற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியிருக்கிறது; தரைத் தளத்தை தாண்டி முதல் தளத்திலும், இன்னும் சில இடங்களில் இரண்டாவது தளத்திலும் வெள்ளம் புகுந்துள்ளது. பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வாகனம் நிறுத்துமிடத்தை தாண்டி முதல் மாடிக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. இதனால் அந்த வீடுகளில் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் பல நாட்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை. இதனால் அவர்களின் வேலையும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தரைத்தளத்தில் வாழும் குடும்பங்களுக்கு மட்டும் தான் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கடந்த 7-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், ‘‘மழை வெள்ளம் காரணமாக, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததன் காரணமாக, பல பகுதிகளில் பொது மக்கள் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர். தெருக்களிலும், தரைத் தளத்திலும் வெள்ளநீர் பெருக்கெடுத்ததால் மேல்தளத்தில் உள்ள மக்களும் மழையால் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு மழை வெள்ளத்தால் பாதித்த மக்களின் துயர் துடைக்கும் வகையில் அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 5,000 ரூபாயும், ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் 10 கிலோ அரிசி ஆகியவற்றை சிறப்பு வெள்ள நிவாரணத் தொகுப்பாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்’’ என்று கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது அதையும் மீறி மேல்தளத்தில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க மறுக்கும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு யார் கொடுத்தது எனத் தெரியவில்லை.

வெள்ள பாதிப்புகளை கணக்கெடுக்கும் அதிகாரிகள் அதற்கான ஒப்புகைச் சீட்டு எதையும் தருவதில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, ‘‘வெள்ளத்தால் உங்கள் வீடு பாதிக்கப்பட்டதா?’’ என்று மட்டும் தான் அதிகாரிகள் கேட்கிறார்களே தவிர என்னென்ன பொருட்கள் சேதமடைந்ததன, அவற்றின் மதிப்பு என்ன? என்பதை கேட்பதில்லை. இது தவறான அணுகுமுறையாகும். சேதமடைந்த பொருட்களுக்கு அரசு இழப்பீடு வழங்குமா.... வழங்காதா? என்பது ஒரு புறமிருக்க வெள்ளத்தால் ஏற்பட்ட மொத்த சேதம் எவ்வளவு? என்பதை ஆவணப்படுத்த இத்தகைய விவரங்களை கணக்கெடுத்து பதிவு செய்வது அவசியமாகும்.

அதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறும்படி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஊராட்சித் தலைவர்களாக இருக்கும் கிராமங்களில் குடிசை இழப்பு போன்றவற்றுக்கு நிவாரண உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாகம் மறுக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த செயல்கள் அனைத்துமே கடுமையாக கண்டிக்கத்தக்கவையாகும்.

கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையில்லாத முட்டுக்கட்டைகளை போட்டு அவர்களை அலைக்கழிப்பது மனிதநேயமற்ற செயலாகும். எனவே, மக்கள் நலன் கருதி கீழ்க்கண்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

1. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ.5,000 நிதி வெள்ளம் புகுந்த வீடுகளை சுத்தம் செய்வதற்கு கூட போதாது என்பதால் நிவாரண நிதியை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

2. தரைத் தளங்களில் அதிக அளவில் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்த வீட்டுப் பயன்பாட்டு பொருட்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. இவற்றின் மதிப்பு பல ஆயிரங்களில் தொடங்கி சில லட்சங்கள் வரை இருக்கும். இந்த இழப்பை அக்குடும்பங்களால் தாங்க முடியாது. எனவே, சேதமடைந்த பொருட்களுக்கு முழுமையாக இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட அளவுக்காவது இழப்பீடு வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, சேதமடைந்த பொருட்களின் மதிப்பை கணக்கிட்டு ஆவணப்படுத்த வேண்டும்.

3. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்த விவரங்களை அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே சென்று பதிவு செய்ய வேண்டும் என்று கணக்கெடுப்புக் குழுவினருக்கு அரசு அறிவுறுத்த வேண்டும். கணக்கெடுப்பு நடத்தப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட வேண்டும்.

4. சென்னையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. கழிவுகளை விட மோசமான கிருமிகளைக் கொண்ட பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள துப்புரவுத் தொழிலாளர்களுக்கு கை, கால் மற்றும் முக உறைகள் வழங்கப்பட வேண்டும்; கிருமித் தொற்றை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

5. கடலூர் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவர்களின் கட்சி அடையாளத்தைப் பார்க்காமல் அனைத்து பகுதிகளிலும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதுடன், நிவாரண உதவிகளையும் வழங்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x