Published : 12 Jun 2021 07:03 AM
Last Updated : 12 Jun 2021 07:03 AM

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையுமா? - நம்பிக்கையுடன் கார் சாகுபடி பணியைத் தொடங்கிய விவசாயிகள்: தென்காசி மாவட்ட அணைகளில் தண்ணீர் திறக்க வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்ற நம்பிக்கையில், தென்காசி மாவட்டத்தில் கார் சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழைக் காலம் ஆகும். தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய அணைப் பாசனங்களில் உள்ள விவசாயிகள், ஜூன் மாத தொடக்கத்தில் கார் சாகுபடி பணிகளை மேற்கொள்வார்கள். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதம் ஆனதால், கார் சாகுபடி பாதிக்கப்பட்டது. தாமதமாக மழை பெய்து அணைகள் நிரம்பியதால், நவம்பர் மாதத்தில் அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

வெயில் அதிகம்

இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை குறிப்பிட்ட காலத்தில் தொடங்கினாலும், தென்காசி மாவட்டத்தில் மழை இன்னும் தீவிரம் அடையவில்லை. பரவலாக தென்மேற்கு பருவக்காற்று வீசி வருகிறது. இருப்பினும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 4 மி.மீ., செங்கோட்டையில் 1 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் வேறு எங்கும் மழைப்பதிவு இல்லை.

இந்த ஆண்டில் கோடைக் காலத்தில் பரவலாக மழை பெய்ததால், கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இருப்பினும் மலையில் பெய்த மழையால் அணைகளில் ஓரளவுக்கு தண்ணீர் இருக்கிறது. தற்போது உள்ள நீரை மட்டும் நம்பினால் சாகுபடி செய்ய முடியாது என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். இருப்பினும், ஒரு சில நாட்களாவது மழை தீவிரம் அடைந்தால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில், கார் சாகுபடி பணிகளை மேற்கொள்ள நாற்றங்காலை சீரமைப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அணைகள் நிலவரம்

தற்போது குண்டாறு அணை மட்டும் முழு கொள்ளளவில் உள்ளது. 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணையில் நீர்மட்டம் 74 அடியாகவும், 84 அடி உயரம் உள்ள ராமநதி அணையில் நீர்மட்டம் 64 அடியாகவும், 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணையில் நீர்மட்டம் 60.37 அடியாகவும், 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணையில் நீர்மட்டம் 88.75 அடியாகவும் உள்ளது.

மழையின் தீவிரம், அணைகளில் நீர் இருப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு, பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x