Published : 11 Jun 2021 20:04 pm

Updated : 11 Jun 2021 20:12 pm

 

Published : 11 Jun 2021 08:04 PM
Last Updated : 11 Jun 2021 08:12 PM

ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளைத் திறப்பதா?- ராமதாஸ், தினகரன் கண்டனம்

ramadoss-urges-to-not-open-tasmac-shops
ராமதாஸ் - டிடிவி தினகரன்: கோப்புப்படம்

சென்னை

ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வரும் 14-ம் தேதியுடன் அமலில் உள்ள ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் வரும் 14-ம் தேதி முதல் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.


எனினும், நோய்த்தொற்று அதிகம் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அழகு நிலையங்கள், சலூன்கள் திறப்பு, பூங்காக்கள் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், 27 மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி முதல், டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பதிவு:

ஊரடங்கு தளர்வுகளின் ஒருகட்டமாகத் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவல் குறையும் விகிதம் கடந்த 4 நாட்களாகப் படிப்படியாகச் சரிந்து வருகிறது. இத்தகைய சூழலில் மதுக்கடைகளைத் திறப்பது கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும்.

அழகு நிலையங்கள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் செயல்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால், அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதைத் தமிழக அரசு உணர வேண்டும்.

ஒருபுறம் கரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கிவிட்டு, மறுபுறம் அதைப் பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளைத் திறப்பது எந்த வகையில் நியாயம்? கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த திமுக இப்போது அதே தவறைச் செய்யலாமா? ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே!

மதுக்கடைகள் திறக்கப்பட்டால் ஏழைக் குடும்பங்களுக்குக் கிடைக்கும் மிகக்குறைந்த வருமானமும் பறிபோய்விடும். குடும்பங்களில் வறுமை அதிகரிக்கும்; வன்கொடுமை பெருகும். இவற்றைத் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது; மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவு:

மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக என்று கூறி மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்துள்ள முதல்வர், அதற்கு நேர்மாறாக நோய்த்தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இதன் மூலம் முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய அரசுக்கும் மக்களின் உயிரைப் பற்றித் துளியும் அக்கறை இல்லை என்பதும், 'யார் எப்படிப் போனாலும் தங்கள் கஜானா நிரம்பினால் போதும்' என்று நடந்துகொள்வதும் மிக மோசமான செயல்பாடாகும்.

டிடிவி தினகரன்: கோப்புப்படம்

ஒரு பக்கம் நிவாரணத் தொகை கொடுப்பது போல் கொடுத்து, அதனை டாஸ்மாக் வழியாக பிடுங்கிக் கொள்ளும் தந்திரத்தையே, இவர்களும் பின்பற்றுவது பெரும் அவலமாகும்.

எனவே, கரோனா நோய்த்தொற்றும் மையங்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ள டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் அறிவிப்பைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 11, 2021


தவறவிடாதீர்!

ராமதாஸ்டாஸ்மாக் கடைகள்ஊரடங்குகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்RamadossTASMAC shopsLockdownCorona virusCORONA TNடிடிவி தினகரன்அமமுக

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x