Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

காவேரிப்பட்டணம் மாங்காய் மண்டிகளுக்கு மா வரத்து அதிகரிப்பு: மல்கோவா ரகம் தரத்தை பொறுத்து ரூ.80-க்கு விற்பனை

காவேரிப்பட்டணத்தில் உள்ள மாங்காய் மண்டிகளுக்கு மா வரத்து அதிகரித்து உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், போச்சம்பள்ளி, சூளகிரி, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 47 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மாங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், மல்கோவா, செந்துாரா, இமாம் பசந்த், பெங்களூரா, மல்லிகா, பீத்தர், பங்கனப்பள்ளி உள்ளிட்ட, 40-க்கும் மேற்பட்ட மா ரகங்கள் விளைவிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மா பூக்கள் பூக்கத் தொடங்கி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் காய்க்கத் தொடங்கும். மே, ஜூன் மாதங்களில் அறுவடை செய்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக அறுவடையும், விற்பனையும் பாதிக்கப்பட்ட நிலையில், நிகழாண்டிலும் கரோனா ஊரடங்கால் மா விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

வாகனப் போக்குவரத்து இல்லாமலும், மாங்கூழ் தொழிற் சாலைகள் போதிய அளவில் இயங்காத காரணத்தாலும் உரிய விலை கிடைக்கவில்லை. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால், மா விவசாயிகள் அறுவடை செய்த மாங்காய்களை காவேரிப்பட்டணத்தில் உள்ள மாங்காய் மண்டிகளுக்கு கொண்டு வரத் தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து மா விவசாயிகள் கூறும்போது, தளர்வுகள் அளிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பிறகும் மாங்காய்கள் ஏலம் எடுக்க வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வரவில்லை. குறைந்த அளவில் ஏலத்தில் வியாபாரிகள் கலந்து கொள்கின்றனர். உள்ளூர் வியாபாரிகள் மாங்காய்கள் வாங்கிச் சென்று சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 25 கிலோ கொண்ட கூடை மல்கோவா ரக மாங்காய்கள் தரத்தை பொறுத்து கிலோ ரூ.1500 முதல் ரூ.2000 வரையும், கிலோ ரூ.80 வரையும் விற்பனையாகிறது. ஆனால் மற்ற ரக மாங்காய்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x