Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

தி.மலை மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை: பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு எச்சரித்துள்ளார்.

தி.மலை மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். ஆட்சியர் சந்தீப் நந்தூரி, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, “கரோனா கட்டுப்படுத்த உறங்காமல் 24 மணி நேரமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். செங்கல் பட்டில் செயல்பட்டு வரும் எச்எல்எல் பயோடெக் ஆலையில் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளார். கரோனா காலத்தில் பொது மக்களுக்கு மருத்துவ உதவி கிடைக் கும் வகையில் மாநில மற்றும் மாவட்ட 24 மணி நேரமும் செயல் படும் வார் ரூம் செயல்படுகிறது.

கரோனா தடுப்பூசி செலுத்து வதில் திருவண்ணாமலை மாவட்டம் பின் தங்கியுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதுவரை 1,32,325 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 31,577 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படாது என மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 2 நாட்களில் தடுப்பூசி வந்துவிடும். தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கும். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்க பணியாற்ற வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும் தனிக் கவனம் செலுத்தி மக்களை பாதுகாக்க வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்துதான் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். வியாபாரிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது. மீறி கொள்முதல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உழவர் சந்தைகளை சிறப்பாக செயல்படுத்த கவனம் செலுத்த வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கடத்தல், சாராய விற்பனையை ஒழிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், குடும்ப அட்டை பெறாத 332 திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண உதவித் தொகை தலா ரூ.2 ஆயிரம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டத்தின் கீழ் 275 மகளிருக்கு தையல் இயந்திரம், வருவாய்த் துறை சார்பில் உங்கள் தொகையில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் 5 பேருக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனைப்பட்டா, 4 பேருக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணையை அமைச்சர் வழங்கினார்.

மேலும், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டார். இதையடுத்து, கரோனா விழிப்புணர்வு சுவரொட் டியை அமைச்சர் வெளியிட்டார். பின்னர், திருவண்ணாமலையை அடுத்த தலையாம்பள்ளம் அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தை ரூ.2 லட்சம் மதிப்பில் பராமரிப்பதற்கான ஆணையை வழங்கினார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, விஷ்ணுபிரசாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x