Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM

கரோனா பரவலை தடுக்க கோயம்பேடு சந்தையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வியாபாரிகளுக்கு தடை: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை

சென்னை

கோயம்பேடு சந்தையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வியாபாரிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

கோயம்பேடு வணிக வளாகத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ஷங்சோங்கம் ஜடக் சிரு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, வணிக வளாகத்தில் உள்ள பொதுக்கழிப்பறைகள் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் பார்வையிட்டனர். பின்னர், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த சந்தையில் வியாபாரம் மேற்கொள்ளும் அனைத்து வணிகர்களுக்கும், இவ்வளாகத்தில் உள்ள மாநகராட்சி மினி கிளினிக்கில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 4,800 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், வெளி மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளிலிருந்து இங்கு வரும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டு, தினமும் குறைந்தது 500 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல, கோயம்பேடு வணிக வளாகத்திலும் தூய்மையைப் பராமரிக்க ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

கோயம்பேடு வணிக வளாகத்தில் வணிகர்கள் அனைவரும் வியாபாரத்தின்போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றவேண்டும். அவ்வாறு பின்பற்றாதவர்கள், சந்தையில் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்படும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வியாபாரிகளுக்கு இங்கு விற்பனை மேற்கொள்ள தடை விதிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, ``கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை வணிகர்கள் கடைபிடிப்பதை மேலும் தீவிரப்படுத்தி, காவலர்கள் மூலம் கண்காணிக்க ஒலிபெருக்கி அறிவிப்புடன்கூடிய உயர் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வணிக வளாகத்தில் ஆங்காங்கே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அங்காடி நிர்வாகக் குழு கட்டுப்பாட்டு அறையிலிருந்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

கோயம்பேடு வணிக வளாகத்தில் முகக்கவசம் அணியாத 1,731 பேர் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாத 699 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த மே மாதத்தில் மட்டும் ரூ.11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ஷங்சோங்கம் ஜடக் சிரு தெரிவித்தார்.

ஆய்வின்போது, மாநகராட்சி மத்திய வட்டார இணை ஆணையர் பி.என்.தர், அண்ணா நகர் காவல் துணை ஆணையர் ஜவஹர், கோயம்பேடு வணிக வளாக முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x