Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM

தடுப்பணையால் கோடையிலும் பாலாற்று படுகையில் தண்ணீர் தேக்கம்: கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை

வாயலூர், வல்லிபுரம் பகுதிகளில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையால், கோடை காலத்திலும் பாலாற்று படுகையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுற்றுப்புற கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த வாயலூரில் பாலாற்று முகத்துவாரம் மூலம், ஆற்றுப் படுகையில் கடல்நீர் ஊடுருவி வந்ததால் கரையோரங்களில் உள்ள விளை நிலங்கள் உப்புத்தன்மையால் பாதிக்கப்பட்டு வந்தன.

மேலும், கோடைக்காலத்தில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி உள்ளிட்ட கரையோர கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், முகத்துவார பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என கரையோர கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகத்தின் நிதியுதவியுடன் கடந்த 2019-ம்ஆண்டு பாலாற்றின் முகத்துவாரம் பகுதியில் 5 அடி உயரம் கொண்ட தடுப்புச்சுவரும், தமிழகஅரசு சார்பில் வல்லிபுரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணையும் அமைக்கப்பட்டன.

இதன்மூலம், பருவமழையால் கிடைத்த தண்ணீர் பாலாற்றில் தேங்கும் வாய்ப்பு ஏற்பட்டது. முன்பெல்லாம், கோடைக்காலத்தில் பாலைவனம் போல் வறண்டு காட்சியளிக்கும் பாலாற்று படுகையில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்பதால், கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் உள்ளது.

இதுகுறித்து, கரையோர கிராம மக்கள் கூறும்போது, ‘‘முன்பெல்லாம் கோடைக்காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. கடந்த 2019-ம்ஆண்டு அமைக்கப்பட்ட தடுப்பணையால் மழைநீர் வீணாகாமல் ஆற்றுப் படுகையில் சுமார் 5 அடிஉயரத்துக்கு 4 கிமீ தொலைவுக்குதேங்கி நிற்பதால், கோடைக்காலத்திலும் தடையின்றி குடிநீர் கிடைக்கிறது. அதனால், பாலாற்றின் பிற பகுதிகளில் அறிவிக்கப்பட்டபடி தடுப்பணைகள் அமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x